சௌதி அரேபியாவில் யோகா செய்யும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமிய பள்ளி மாணவிகள் யோகா செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதற்கு மேல், "சௌதி அரேபியாவில் இதுக்கு பெயர் யோகா.. நம்ம ஊர்ல இதுக்கு பெயர் மதவாதம்..!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட பதிவை R M Elango என்பவர் 2020 டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார்.

R M Elango மட்டுமல்ல... பலரும் இந்த புகைப்படத்துடன் கூடிய தகவலை சில ஆண்டுகளாகவே ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

யோகாவை குறிப்பிட்ட மதத்தினர் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அது உடல் மற்றும் மனதுக்கான பயிற்சி. குறிப்பிட்ட மதத்துக்குள் அதை அடக்குவது சரியாக இருக்காது. விருப்பம் உள்ள அனைவரும் யோகா செய்கின்றனர். இந்துக்கள் மட்டும்தான் யோகா செய்கிறார்கள் என்று இல்லை. யோகா தெரியாத இந்துக்கள் கோடிக் கணக்கானவர்கள் உள்ளனர்.

அப்படி இருக்கும்போது, இந்தியாவில் யோகாவுக்கு மத சாயம் பூசிக் குறிப்பிட்ட மதத்தினர் அதை செய்வதில்லை என்பது போலவும் ஆனால் அந்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் யோகாவை பள்ளி மாணவிகளே விரும்பி செய்வது போலவும் பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள மாணவிகளின் பள்ளி சீருடையைப் பார்க்கும்போது இந்தியாவில் எடுக்கப்பட்டது போல உள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த புகைப்படம் உண்மையில் எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் நமக்குக் கிடைத்தன. இந்து மத ஆதரவு தளங்கள் மற்றும் சில செய்தி ஊடகங்களில் இந்த புகைப்படம் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் எடுக்கப்பட்டது என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: hinduismnow.org I Archive

தொடர்ந்து தேடியபோது, இந்த புகைப்படத்தை ஏபி செய்தி நிறுவனம் எடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டு சில செய்திகள் நமக்கு கிடைத்தன. இதன் அடிப்படையில் ஏபி இமேஜஸ் தளத்தில் சென்று அகமதாபாத், இஸ்லாமிய பெண்கள், யோகா எனப் பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஏபி இமேஜஸ் தளத்தில் நமக்குக் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: apimages.com I Archive

அதில் இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி அகமதாபாத்தில் எடுக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஜூன் கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சௌதி அரேபியாவில் எப்போது யோகா பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது என்று தேடினோம். 2017 நவம்பரில்தான் இதற்கான அனுமதியை சௌதி அரேபிய அரசு வழங்கியுள்ளது. யோகாவை ஒரு விளையாட்டாக மேற்கொள்ள சௌதி அரசு அனுமதி அளித்துள்ளது என்று அப்போது பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்ததும் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: indiatimes.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள புகைப்படம் சௌதி அரேபியாவில் எடுக்கப்பட்டது இல்லை; இந்தியாவில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி எடுக்கப்பட்டது. ஆனால், சௌதி அரேபியாவில் 2017ம் ஆண்டில்தான் யோகாவை விளையாட்டாக மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செளதி அரசு அனுமதி வழங்குவதற்கு முன்பே இந்தியாவில் விருப்பம் உள்ள இஸ்லாமியர்கள் யோகா செய்து வந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் இஸ்லாமிய சிறுமிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட படத்தை எடுத்து சௌதி அரேபியாவில் எடுக்கப்பட்டது போன்று தவறான தகவல் பரப்பியது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு அகமதாபாத் நகரில் எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சௌதி அரேபியாவில் யோகா செய்யும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False