
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். நிலைத் தகவலில், “செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு பாரத பிரதமர் அவர்களின் மலரஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Narayanan Vengat என்பவர் 2019 நவம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வ.உ.சிதம்பரனார் நினைவுதினம் நவம்பர் 18ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது நினைவு நாளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியது போல படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியிருந்தால் அது தொடர்பான செய்தி, படம் வெளியாகி இருக்கும். நிச்சயம் அவருடைய சமூக ஊடக பக்கங்களில் அந்த படத்தை அவர் பகிர்ந்திருப்பார். ஆனால், அவருடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் அப்படி எந்த ஒரு படமும் இல்லை. அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியது பற்றி மோடி வெளியிட்டிருந்த பதிவுகள் மட்டுமே நமக்கு கிடைத்தன.
Archived Link 1 | Archived Link 2 |
பிரதமர் அஞ்சலி செலுத்தும்போது அவரைச் சுற்றி இவ்வளவு பேர் இருக்கவும் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இது பழைய படமாக அல்லது போலியான படமாக இருக்கலாம் என்று தெரிந்தது.
அதை உறுதி செய்ய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் போலியானது என்பது தெரிந்தது. அண்ணல் அம்பேத்கர் படத்துக்கு மோடி அஞ்சலி செலுத்தும் படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.
Search Link |
இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தொடர்ந்து தேடினோம். அப்போது, 2014ம் ஆண்டு மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, குஜராத் சட்டப்பேரவை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மோடி அஞ்சலி செலுத்தினார் என்று படத்துடன் கூடிய செய்திகள் கிடைத்தன.
deccanchronicle.com | Archived Link |
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மோடி அஞ்சலி செலுத்தினார் என்று பகிரப்படும் படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்

Title:வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்திய மோடி: புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
