ஒடிஷா வீடியோவை எடுத்து தர்மபுரியில் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியதாக பரப்பும் விஷமிகள்!

False சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

காட்டுப்பன்றி விவசாயி ஒருவரைத் தாக்கும் வீடியோவை எடுத்து தர்மபுரியில் நடந்தது என்று சிலரும் விருதுநகரில் நடந்தது சிலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காட்டுப் பன்றி மனிதர் ஒருவரை தாக்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி ஊரில் நெடுஞ்சாலையில் காட்டுப்பன்றி மனித மோதல் விவசாயிகள் ???” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

மற்றொரு பதிவில், “விருதுநகர் மாவட்டம் பாலைவனத்தும் அருகில் நடந்த காட்டுப் பண்றியால் ஒருவர் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மனிதர்களை காட்டுப் பன்றி தாக்கும் வீடியோவை தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சம்பவம் போல சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் இந்த சம்பவம் எந்த ஊரில் நடந்தது என்று அறிந்துகொள்ள இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த சம்பவம் தமிழ்நாட்டிலேயே நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் 2021ம் ஆண்டு முதல் இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. எந்த ஊரில் என்று குறிப்பிடாமல்  இந்தியாவில் என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர்.

வீடியோவின் வெவ்வேறு காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி இந்த வீடியோவை kalingatv.com என்ற இணையதளம் வெளியிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. அதில், “ஒடிஷா: பஞ்சாநகரில் காட்டுப் பன்றி ஒருவரைத் தாக்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: kalingatv.com I Archive I newsflare.com I Archive

செய்தியில், ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் பஞ்சாநகர் முதுலிபள்ளி கிராமத்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த நபரைக் காட்டுப் பன்றி தாக்கியது. உடனே பொது மக்கள் திரண்டு காட்டுப்பன்றியை விரட்டி அந்த நபரை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் ஒடிஷாவில் நடந்த சம்பவத்தின் வீடியோவை இப்போது தமிழ்நாட்டில் நடந்தது போன்று சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஒடிஷாவில் 2021ம் ஆண்டு காட்டுப்பன்றி ஒருவரை தாக்கிய வீடியோவை இப்போது தமிழ்நாட்டில் நடந்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ஒடிஷா வீடியோவை எடுத்து தர்மபுரியில் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியதாக பரப்பும் விஷமிகள்!

Written By: Chendur Pandian  

Result: False