இஸ்லாமியர்கள் மாடியில் தொழுகை நடத்திய புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டதாக ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இஸ்லாமியர்கள் வீட்டு மாடியில் தொழுகை செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இவர்களின் ஒரே லட்சியம் இந்தியா முழுக்க பரப்புவதுதான்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை ஶ்ரீ ஹனுமத் தாசன் என்பவர் 2020 ஏப்ரல் 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரைக் குறை சொல்லி பலரும் சமூக ஊடகங்களில் இந்த படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். பலரும் இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் பொதுவாக குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இந்தியா முழுக்க பரப்புவதுதான் லட்சியம் என்று குறிப்பிட்டதன் மூலம் இது இந்தியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடுவது உறுதியாகிறது.
அதே போல் சில பதிவுகளில் தமிழகத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது போன்று பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த புகைப்படம் உண்மையில் இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தைப் பார்க்கும்போது இந்தியாவில் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது. எனவே இதை உறுதி செய்ய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய தேடலில் பலரும் இந்த படத்தை குறிப்பிட்ட சமுகத்தினரை குற்றஞ்சுமத்திப் பகிர்ந்து வருவது காண முடிந்தது. இவற்றுக்கு நடுவே இந்த படம் குவைத் நாட்டில் எடுக்கப்பட்டது என்று ஒரு செய்தியும் எகிப்தில் எடுக்கப்பட்டது என்று ஒரு செய்தியும் நமக்கு கிடைத்தது. ஆனால், இந்த இரண்டு செய்திகளிலும் அங்குதான் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
அதே நேரத்தில் இந்த புகைப்படம் குவைத்தில் எடுக்கப்பட்டது என்று இஸ்லாமியர்களும் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர். அவர்களும் கூட அசல் படத்தையோ, குவைத்தில் எந்த இடத்தில் எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற தகவலையே வெளியிடவில்லை. எனவே, இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்று தொடர்ந்து தேடினோம்.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தில் தூரத்தில் ஒரு மசூதியின் குவிந்த கோபுரமும் அதற்கு முன்பு ஆறு அல்லது கடல் போன்று தண்ணீரும் இருப்பதும் தெரிந்தது. இதை வைத்து எகிப்பு, குவைத் கடற்கரையோரம், ஆற்றங்கரை ஒரம் உள்ள மசூதி என்று பல்வேறு கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.
அப்போது, கிட்டத்தட்ட படத்தில் உள்ளது போன்ற மசூதியின் குவிகோபுரம் மற்றும் உயரமான செங்குத்து கோபுரம் இருக்கும் படம் கிடைத்தது. ஆனால், அது துபாயில் இருப்பதாக தெரியவந்தது. அதே நேரத்தில் துபாயில் இந்த புகைப்படம் எடுத்திருக்கலாம் என்று வெளியிட்ட சில உண்மை கண்டறியும் ஆய்வுகளும் நமக்கு கிடைத்தன.
துபாய் ஆர்க்கிடெக்சுரல் ஹெரிடேஜ் டிப்பார்ட்மெண்ட் கட்டிடத்துக்கு அருகே உள்ள மசூதியுடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் படம் ஒத்துப்போனது. உண்மை கண்டறியும் ஆய்வு வெளியிட்ட ஊடகங்களும் இதையே குறிப்பிட்டு இந்த புகைப்படம் துபாயில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்தன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் கொரோனாவை பரப்பும் நோக்கில் வழிபாடு நடத்தினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:இஸ்லாமியர்கள் மாடியில் தொழுகை நடத்திய புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False