
பாகிஸ்தானில் சிறுவர்கள் இந்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஏராளமான ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ளார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
இரண்டு சிறுவர்கள் கைகளில் ஏராளமான இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டள்ளது. அந்த வீடியோவில், “பாக்கிஸ்தாணில் நம் நாட்டு பணம் இப்ப புரியுதா பாரத பிரதமர் மோடிஜி அரிவித்தது பணம் செல்லாது எண்று” என்று மிக மோசமான எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மிகப்பெரிய பாதிப்பை மக்கள் சந்தித்தனர். ஆனால், அதனால் பலன் இருந்தது என்று நிரூபிக்க பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நன்மையா, தீமையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்திய பணத்தைப் பாகிஸ்தானில் சிறுவர்கள் வைத்திருந்ததாக பரவும் தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில் மிகவும் பழமையான பதிவுகளைத் தேடி எடுத்துப் பார்த்தோம். எதிலும் சரியான தகவல் இல்லை.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I instagram.com
தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோவை தான் எடுத்தேன் என்றும், இந்த வீடியோவை மிகவும் வைரலாக்கிய நெட்டிசன்களுக்கு நன்றி என்றும் ஒருவர் பதிவு வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்த போது, டிசம்பர் 27, 2024 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அந்த வீடியோவை அவர் பதிவேற்றம் செய்திருந்ததைக் காண முடிந்தது. இந்த வீடியோவை அவர் பாகிஸ்தானில் எடுத்ததாகக் குறிப்பிடவில்லை.
தொடர்ந்து தேடிய போது இந்த நபர் வீடியோவில் இடம் பெற்றிருந்த சிறுவர்களுடன் எடுத்துக்கொண்ட மற்றொரு வீடியோவை யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் இந்த வீடியோவை பாகிஸ்தானிலோ, உத்தரகாண்டிலோ எடுக்கவில்லை… லக்னோவில் ஆஷியானா சௌராஹா (Ashiana Chauraha) என்ற பகுதியில் எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆம், பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் எடுத்ததாக அவர் பதிவிட்டிருந்தார்.
லக்னோவில் ஆஷியானா சௌராஹா பகுதியை கூகுள் மேப்-ல் தேடி எடுத்தோம். அதன் ஜங்ஷன் பகுதியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இடம் பெற்றிருந்த இடங்கள் அப்படியே இருந்தன. இதன் மூலம் இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவானது.
குப்பைகள் மொத்தமாக கொட்டப்படும் இடத்திலிருந்து இந்த ரூபாய் நோட்டுக்கள் கிடைத்ததாக சிறுவர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. வீடியோவை எடுத்தவரே இது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்துள்ளார். அவர் கூறிய இடத்தின் கூகுள் ஸ்ட்ரீட் வியூ காட்சியும் வீடியோவில் இடம் பெற்ற சாலையின் காட்சியும் ஒத்துப்போகிறது. இதன் மூலம் இந்த வீடியோ பாகிஸ்தானைச் சார்ந்தது இல்லை என்பதும் பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என்பதை உறுதி செய்யும் வகையில் இல்லை என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
லக்னோவில் குப்பையில் இருந்து பழைய பொருட்களை சேகரிக்கும் சிறுவர்கள் வைத்திருந்த பழைய செல்லாத ரூ.500, 1000ம் ரூபாய் நோட்டுக்கள் வீடியோவை பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தான் சிறுவர்கள் கைகளில் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டு என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
