உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் வன்முறை என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கிக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் இளைஞர்கள் கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வாகனங்களைத் தாக்கி உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரீல்ஸை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வட இந்தியாவில் ஹோலி உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது ஆங்காங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாக சமூக ஊடகங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது என்று சில எக்ஸ் தள பதிவுகள் நமக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அவையும் இந்த சம்பவம் அகமதாபாத்தில் நடந்தது என்று உறுதி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I hindustantimes.com I Archive 2

உணவகம் ஒன்றைத் திறப்பது தொடர்பாக சிகார்வார் மற்றும் பாவ்சர் என்ற இரு நபர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது. சிகார்வார் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதை அறிந்த பாவ்சர் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன், குற்றவாளிகளுக்குச் சரியான பாடம் நடத்திய பிறகு எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு அகமதாபாத் போலீஸ் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவும் நமக்கு கிடைத்தது.

Archive

இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தது இல்லை என்பதும், ஹோலி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை இல்லை என்பதையும் உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் வீடியோவை எடுத்து உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் வன்முறை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False