நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சிலை அமைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிலை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை வைத்து நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அதில், "அமெரிக்காவில் கோலிக்கு சிலை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஆளுயர சிலை திறப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிரிக்கெட் பற்றி அதிகம் ஆர்வம் காட்டாத அமெரிக்காவில், மிகவும் முக்கியமான இடமான நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் எதற்காக விராட் கோலிக்கு சிலை அமைக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். கூகுள் மேப் தளத்திற்கு சென்று மிக சமீபத்தில் வெளியான நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரின் புகைப்படங்களைப் பார்த்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது 2024 ஜூன் 25ம் தேதி வெளியாகி இருந்தது. 2024 ஜூலையில் வெளியாகி இருந்த டைம்ஸ் ஸ்கொயர் புகைப்படங்கள் எதிலும் விராட் கோலியின் சிலை இல்லை. எனவே, சந்தேகம் அடிப்படையில் இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில ஊடகங்களில் ஒரு மெத்தை தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டிருப்பதாகவும், இது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிட்டு சில செய்திகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

குறிப்பிட்ட அந்த மெத்தை தயாரிப்பு நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களிலிருந்து அந்த வீடியோ பதிவை தேடி எடுத்தோம். யூடியூப், எக்ஸ் தள வீடியோ பதிவுகளில் இது கம்யூட்டர் கிராஃபிக்ஸ் - அனிமேஷன் மூலம் எடுக்கப்பட்டது என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், சிஜிஐ அனிமேஷன் என்று டேக் மட்டும் செய்திருந்தனர். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த பதிவில் *CGI video என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் விராட் கோலிக்கு சிலை வைக்கப்பட்டது போன்று கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன் வீடியோ வெளியிட்ட தனியார் நிறுவனம் என்று செய்தி வெளியிட்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால், உண்மையில் அங்கு விராட் கோலிக்கு சிலை வைக்கப்பட்டது போன்று, "நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் விராட் கோலிக்கு சிலை" என்று செய்தி வெளியிட்டிருப்பதால் அது தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தனியார் நிறுவனம் வெளியிட்ட கம்ப்யூட்டர் அனிமேஷன் வீடியோ விளம்பரத்தை உண்மை என்று நம்பி அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலிக்கு சிலை நிறுவப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் தவறு என்று

ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலிக்கு சிலை வைக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False