பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பாக்யராஜ் தொடர்பான அஜால்குஜால் சமாச்சாரங்களை வெளியிடுவேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பயில்வான் ரங்கநாதன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான்! ஏழு மாதத்தில் பிறந்தவர் பாக்யராஜ் என்று எம்.ஜி.ஆருக்கே தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் நடந்த அஜால்குஜால் சமாச்சாரங்களை எடுத்து சொன்னால் பாக்யராஜின் மானம் கப்பலேறும் – பயில்வான் ரங்கநாதன்” என்று இருந்தது.

இந்த பதிவை Tamil Muslims View என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் விமர்சித்திருந்தார். பின்னர், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், அவரை விமர்சித்து ப பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

திரையுலக பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் ரகசியங்கள் என்று தொடர்ந்து பேசி வருபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். அதனால், இந்த நியூஸ் கார்டு உண்மையானது என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகிறனர்.

இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. மேலும், லோகோ உள்ளிட்டவற்றில் சில வித்தியாசங்களை காண முடிந்தது. எனவே, போலியான நியூஸ் கார்டு என தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

உண்மையில் இப்படி ஏதும் பயில்வான் ரங்கநாதன் கூறினாரா, ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று பார்த்தோம். ஆனால், பயில்வான் ரங்கநாதன் அப்படிக் கூறியதாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஏப்ரல் 20ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதிலும், பயில்வான் ரங்கநாதன் தொடர்பான நியூஸ் கார்டு இல்லை. 

ஜூனியர் விகடனில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஏதும் வெளியாகியுள்ளதா என்று அங்குப் பணி புரியும் நண்பர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவருடைய பேட்டி எல்லாம் வெளியிடுவது இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

 ஜூனியர் விகடன் சோஷியல் மீடியா பொறுப்பாளர் வெங்கடேஷைத் தொடர்புகொண்டு, இந்த நியூஸ் கார்டு உண்மையானதா, போலியானதா என்று உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டோம். வாட்ஸ் அப் மூலம் அவருக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்தோம். அதைப் பார்த்த அவர், இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. இது போலியான நியூஸ் கார்டு என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பாக்யராஜ் தொடர்பான அஜால்குஜால் சமாச்சாரங்களை வெளியிடுவேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாக்யராஜ் ரகசியங்களை வெளியிடுவேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பகிரப்படும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply