FactCheck: வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரா?

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

நவம்பர் 4, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, ‘’ வருண் சக்கரவர்த்தி அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் திடீர் ஓய்வு பெறுகிறார். காலம் இறுதி வரை விஜய் ரசிகனாக இருப்பேன் எனக் கூறியுள்ளார்,’’ என்று கேப்ஷன் வைத்துள்ளனர். இதுதவிர, புகைப்படத்தின் மீது, ‘’மேட்ச் பிக்சிங் பண்ண எனக்கு சிஎஸ்கே அணி தேவையில்லை. அம்பயரை வாங்கி விளையாடும் மும்பை இந்தியன்ஸ் தேவையில்லை. எதுக்கும் உதவாத ஆர்சிபி தேவையில்லை. தளபதி ரசிகன் என்பதில் கர்ப்பம் அடைகிறேன் – வருண் சர்க்கார்வர்த்தி,’’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது கிண்டலுக்காக வெளியிடப்பட்டதா அல்லது நிஜமாகவே உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா என்றே தெரியாத அளவுக்கு குழப்பம் அளிப்பதாக உள்ளது. இதனைப் பலரும் ஷேர் செய்யும் சூழலில், இது எந்தளவுக்கு உண்மை எனக் கேட்டு நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக சந்தேகம் கேட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2020 சீசன் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி திறமையை வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்மூலமாக, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ள அவரை சுற்றி நிறைய வதந்திகளும் பரவ தொடங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலும்.

வருண் சக்கரவர்த்தி காயமடைந்த சூழலில், அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பது சந்தேகம்தான் என ஆங்கில ஊடகங்களில் செய்தி சமீபத்தில் வெளியானது.

DNA India Link

ஆனால், தமிழ் ஊடகங்களிலோ அவர் காயம் காரணமாக, ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே விலகிவிட்டார் என்று செய்தி வெளியானது. அவருக்குப் பதிலாக, நடராஜன் அணியில் இடம்பெறுவார் என்றும் தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

Nakkheeran News Link

அதேசமயம், காயம் காரணமாக, அவர் போட்டியில் இருந்து விலகியிருப்பதாகக் கூறப்படும் தகவல் உண்மைதான். ஆனால், அவர் ஒருவேளை காயம் சரியானால் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது. அத்துடன், அவர் நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக, எதுவும் அறிவிக்கவில்லை. இதுபற்றி அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் நாம் விசாரித்து தெளிவுபடுத்தியுள்ளோம்.

உண்மையில், சில நாட்கள் முன்பாக, நடிகர் விஜயை வருண் சக்ரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இதனை மேற்கோள் காட்டியே மேற்கண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் கிண்டல் செய்து, குறிப்பிட்ட தகவலை பகிர்ந்துள்ளனர். ஆனால், அது கிண்டல் என்பதையும் கடந்து, உண்மை போலவே மற்றவர்களை குழப்பும்படி உள்ளது. எனவே, அந்த தகவலை யாரும் உண்மை என நம்பி ஷேர் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நகைச்சுவையானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Satire