அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடோனில் தீ விபத்து; பணக்குவியல் கண்டுபிடிப்பு?

அரசியல் | Politics சமூக வலைதளம்

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான குடோனில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும், அதில் அதிக சேதம் ஏற்படாதபோதும், குடோனில் இருந்து மலை போல பதுக்கிவைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறிப்பாக, ஃபேஸ்புக்கில் நிறைய பேர் இந்த வீடியோ பகிர்ந்து வருகின்றனர். எனவே, அந்த வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இந்த செய்தியில் தொகுத்துள்ளோம்.

வதந்தி:

நேற்று காலை தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் குடவுனில் தீ விபத்து! சேதாரம் சிறுசுதான்!!
இந்த வீடியோவை பார்த்தவுடன் பத்துபேருக்கு அனுப்பவும் இல்லாவிட்டால் தமிழ்நாடு கெட்டுகுட்டிச்சுவரா போவதற்கு நீங்களும் ஒரு காரணம்…..

Archive Link

இந்த வீடியோவை பகிர்ந்திருப்பவர் டிடிவி தினகரன் தலைமையில் இயங்கும் அமமுக.,வில் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். சென்னை ஆர்.கே.நகர் 38வது வட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரைப் போலவே, பல பேர் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அனைவருமே, இது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் குடோனில் நடந்த தீ விபத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும், அவர் பதுக்கி வைத்துள்ள பணக்குவியல் இதில் தெரியவந்துள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பகிர்ந்தவர்களின் விவரம் பற்றிய அறிய இங்கே கிளிக் செய்யவும். ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இது தவிர யூடியூப்பில் கூட இத்தகைய வீடியோ, கன்டென்ட் மாறாமல் அப்படியே பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archive Link

உண்மை அறிவோம்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர், சுகுணாபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. அஇஅதிமுக.,வில் நீண்ட கால உறுப்பினராக உள்ள இவர், தற்போதைய தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபற்றி எதிர்க்கட்சியான திமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தும் உள்ளது. அதன் விவரத்தை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது, குடோனில் மலைபோல பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாகவும் கூறி, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தமிழில் நிறைய பேர் பகிர்ந்திருந்தாலும், அவர்களில் முதன்மையான நபராக இருப்பவர், சென்னை ஆர்கே நகர் 38வது வட்டத்தைச் சேர்ந்த Sumaiya Sumaiya  என்பவர் ஆவார். இவர் அடிப்படையில், டிடிவி தினகரன் அணியை சேர்ந்தவர் என்பது, புரொஃபைல் புகைப்படத்திலேயே தெளிவாக தெரிகிறது. ஆதார புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அஇஅதிமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியுள்ளார். அதேசமயம், அவரது ஆதரவாளர்கள், தமிழக அரசு பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் சமூக ஊடகங்களில் ஊழல் புகார் கூறிவருகின்றனர். இதையொட்டியே, இத்தகைய போலி வீடியோவை அந்த பெண் பகிர்ந்துள்ளதாக, சந்தேகமின்றி தெரியவருகிறது.

இருந்தாலும், அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான குடோனில் தீ விபத்து எதுவும் நிகழ்ந்ததா என்பது பற்றி கூகுளில் தேடினோம். அதில், அப்படி ஒரு செய்தி நடக்கவே இல்லை என்று தெரியவந்தது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த வீடியோ தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பல பேரால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆய்வு செய்து, இந்த வீடியோவில் கூறப்படும் செய்தி போலியானது என்று, ஏற்கனவே altnews நிரூபித்துள்ளது. அந்த செய்தியின் விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.  

செய்தி போலியானது என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய விரும்பினோம். இதன்படி, Yandex இணையதளத்தில் இதுபற்றி தேடினோம். அதில், வீடியோ காட்சிகள் உண்மைதான் என்று தெரியவந்தது. மேலும், இந்த வீடியோ பகிரப்பட்டுள்ள இணையதளங்கள் பற்றியும் நிறைய இணைப்புகள் கிடைத்தன. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதேபோல, கூகுளில் இந்த வீடியோ பற்றி தேடியபோது, நிறைய இணைப்புகள் கிடைத்தன. அதில், ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்தபோது, இந்த வீடியோ, ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் நகரில் நடந்த கண்காட்சி ஒன்றில் எடுக்கப்பட்டது என்ற விவரம் கிடைத்தது. ஸ்பெயின் மொழியில் பகிரப்பட்ட இந்த வீடியோ, அங்கிருந்து படிப்படியாக பல மொழிகளுக்குப் பரவி, தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளதாக, தெரிகிறது. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) குறிப்பிட்ட வீடியோ ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் நடந்த கண்காட்சி ஒன்றில் எடுக்கப்பட்டதாகும்.
2) உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
3) பாரபட்சமின்றி, உலக அளவில் பரவிய இந்த வீடியோவை, தமிழக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தங்களது சமூக ஊடக பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
4) இத்தகைய தீ விபத்து எதுவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் குடோனில் நடைபெறவில்லை.
5) அமைச்சர் வேலுமணி மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை பெரிதுபடுத்த, இத்தகைய விஷம பிரசாரம் நடைபெற்றுள்ளது

முடிவு:
குறிப்பிட்ட வீடியோ உண்மைதான். ஆனால், அது அமைச்சர் வேலுமணியின் குடோனில் எடுக்கப்பட்டதில்லை. மேலும், அவரது குடோனில் தீ விபத்து எதுவும் நடைபெறவில்லை. இது தவறான செய்தி என்று உரிய ஆதாரங்களின்படி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடோனில் தீ விபத்து; பணக்குவியல் கண்டுபிடிப்பு?

Fact Check By: Parthiban S 

Result: False