
‘’சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்ற காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள கருப்புப் பண பட்டியல் என்று கூறி இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். இதனை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.
ஆனால், இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்ட தேதி, 2014ம் ஆண்டாக உள்ளதால், இதேபோல வேறு யாரேனும் சமீபத்தில் தகவல் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம்.
அப்போது தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பலர் இதே தகவலை வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
இதன்படி, ‘’சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல்,’’ என்று கூறி, சிலரது பெயர் விவரங்களையும், அவர்கள் பெயரில் இவ்வளவு பணம் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியாக, இவ்வளவு கருப்புப் பணம் வைத்துள்ள ஸ்டாலினுக்கு மீண்டும் ஓட்டு போட்டால், தமிழ்நாட்டை கொள்ளையடித்துவிடுவார், என்றும் கூறியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் கூறியது போல விக்கிலீக்ஸ் எதுவும், கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதில்.
இவர்கள் பகிரும் தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே, இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும். கீழே அதுதொடர்பான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதன்படி, விக்கிலீக்ஸ் இப்படி எதுவும் பட்டியல் வெளியிட்டுள்ளதா என்று அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://wikileaks.org/) சென்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் காண கிடைக்கவில்லை.
ஆனால், கடந்த 2011ம் ஆண்டில், இந்தியாவில் இருந்துதான் பெருமளவு கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுவதாக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே குறிப்பிட்டிருந்தார். அது மட்டும்தான் உண்மை.
அவர் அப்படி தெரிவித்த நாள் முதலாக, இந்தியர்களின் கருப்புப் பண பட்டியல் என்று கூறி மேற்கண்ட தகவல் இணையத்தில் பலராலும் பகிரப்படுகிறது.
ஆனால், அசாஞ்சே அல்லது விக்கிலீக்ஸ் நிறுவனமோ அப்படி எந்த பட்டியலும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, அவர்கள் அப்போதே மறுப்பு தெரிவித்தும் விட்டனர்.
WikiLeaks FB Post Link I WikiLeaks Tweet Link
எனவே, விக்கிலீக்ஸ் மறுப்பு தெரிவித்த பிறகும், உண்மை தெரியாமலேயே, பழைய தகவலை மீண்டும் மீண்டும் ஆதாரமின்றி பகிர்ந்து வருகிறார்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல்- உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
