மோடியை எதிர்கொள்ள முடியாததால் சீன அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா?

அரசியல் | Politics இந்தியா | India சர்வதேசம் | International

பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியாததால்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “வணக்கம் நண்பர்களே சீன அதிபர் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டது உண்மை தான். காரணம் மோடி தலைமையிலான பாரதத்தை எதிர்க்க வேண்டும் மிரட்ட வேண்டும் என்பதற்காகவே தனது முழு சிந்தனையையும் பயன்படுத்தி தன்னுடைய நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி பல வகையிலும் தோல்வியை கண்டுளதால் வந்த பிரச்சினை

ஒன்று : கொரானா தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் ஜீ ஜிங்பிங் தோல்வி. அதே கொரானாவை கட்டுபடுத்துவதில் மோடிஜீ வெற்றி கண்டுள்ளார்

இரண்டு : கொரானா தடுப்பூசி கண்டு பிடித்ததில் ஜீ ஜிங்பிங் அரசுக்கு தோல்வி. அதே கொரானா தடுப்பைசி கண்டுபிடித்ததில் மோடி ஜீ அரசு வெற்றி கண்டுள்ளது

மூன்று : ஜீ ஜிங்பிங் கொரானா தடுப்பூசி போடுவதில் ஒரு ஒழுங்கு முறையில்லாமல் போட பட்டது மட்டுமின்றி அந்த தடுப்பூசிகள் சரியாக பலன் தராததால் இன்று வரை ஒமிக்ரான் வகையை சேர்ந்த கொரானாவினால் லாக்டவுன் முடிந்த பாடில்லை இன்றும் தொடர்கிறது. அதனால் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. அதே கொரானா தடுப்பூசி போடுவதில் மோடி அரசு வெற்றி கண்டு நம் பாரதம் சகஜமான சூழ்நிலையில் இன்றைக்கு பிரிட்டன் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி பாரதம் 5துவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது எல்லுவற்றுக்கும் மேலாக சீனாவின் பாதுகாப்பே ஜீ ஜிங்பிங் அவர்களால் கேள்விகுறியாக உள்ளதாக அவர்மேல் குற்றம் சாட்டபட்டுள்ளது. காரணம் இந்தியாவை உளவு பார்க்க சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வந்தது அல்லவா, அந்த கப்பலால் இந்தியாவை உளவு பார்க்க முடியவில்லை மாறாக அந்த கப்பளுடைய அனைத்து டேட்டாவையும் நமது இந்திய செயற்கை கோள்கள் எடுத்துவிட்டன இது தான் ஜீ ஜிங்பிங் மீது அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு கோபம். அதனால் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டுள்ளார்.

இன்னும் வரும் நாட்களில் நிறைய காரணங்கள் வரகூடும் அதுவரை கொஞ்சம் பொருமை. சுருக்கமாக மோடியை எதிர்த்தால் இந்தியாவில் மட்டுமல்ல உலக தலைவர்களே அழிந்து விடுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. என்ன தவம் செய்தோமோ நமது மோடி எனும் தலைவரை நாம் பிரதமராக அடைவதற்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Karthieshwaran என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 செப்டம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2022 செப்டம்பர் 24, 25 தேதிகளில் சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இது வதந்தி என்று கூட அறியாமல் சில ஊடகங்கள் சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்று செய்தி வெளியிட்டதுடன், விவாதம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தின. இந்த சூழலில், சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது உண்மைதான் என்றும், அதற்கு நம்முடைய பிரதமர் மோடிதான் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். யாரோ நகைச்சுவை, நையாண்டிக்காக இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று முதலில் கருதினோம். ஆனால், பலரும் இந்த பதிவு உண்மை என்பது போலக் கருதி சமூக ஊடகங்களில் பரப்பி வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

பிரதமர் மோடி கொரோனா பரவலை மிக சிறப்பாக கட்டுப்படுத்தினார், அனைவருக்கும் தடுப்பூசி போட்டார், சீன ராணுவ கப்பலை உளவு பார்த்தார் என்று பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த விஷயங்களில் மோடியின் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அந்த பொதுவான கருத்துக்குள் நாம் செல்லவில்லை. சீன அதிபர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டாரா என்று மட்டும் ஆய்வு செய்தோம். 

சீனா கம்யூனிச நாடு. அங்கு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே செய்திகள் வெளியாகும். ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, புதிதாக ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தால் அந்த செய்தியை அரச ஆதரவு ஊடகம் வெளியிட்டால் மட்டுமே உறுதியாகும். அப்படி இல்லாத மற்ற செய்திகள் எல்லாம் வதந்தியாகவே கருதப்படும். சீனாவில் ஆட்சி மாற்றம் நடந்ததாகவோ, அதற்கான முயற்சி நடந்ததாகவே எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. 

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I vikatan.com I Archive 2

மேலும், இந்த வதந்திக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் சீன தலைவர் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியைப் பார்வையிட்டார் என்று செய்தி வெளியாகி உள்ளது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தால் அவர் அதிபருக்கு உரிய அனைத்து அதிகாரங்கள், பாதுகாப்போடு கண்காட்சிக்கு வந்திருக்க முடியாது.

சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியை நம்பி, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மற்றபடி ஜி ஜின்பிங் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி எதுவும் ஏற்படவில்லை என்று முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. சீன அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான சிசிடிவி-யில் 2022 செப்டம்பர் 28ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் தியான்மென் சதுக்கத்தில் நடந்த தியாகிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்று செய்தி வெளியாகி இருந்தது. இந்திய ஊடகங்களும் கூட சமூக ஊடகங்களில் பரவிய வதந்திக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர் என செய்தி வெளியிட்டிருந்தன.

உண்மைப் பதிவைக் காண: cctv.com I Archive

இவை எல்லாம், சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது உண்மைதான் என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது உண்மை என்றும் அதற்கு மோடி தான் காரணம் என்றும் பரவும் சமூக ஊடக பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடியை எதிர்கொள்ள முடியாததால் சீன அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False