
‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக நபர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில், ஏற்கனவே பகிரப்பட்ட பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து, இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’பாஜக ஆளும் காஜியாபாத்தில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக நிர்வாகி,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதால், ஆய்வு செய்யும்படி நமது வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை உண்மையா என்று அறிவதற்காக, கூகுளில் பதிவேற்றி நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, ஏற்கனவே, இது மொரோக்கோ நாட்டில் நிகழ்ந்த சம்பவம் என்று கூறி தகவல் பரவியிருக்கிறது. இதுதொடர்பாக, பல்வேறு ஃபேஸ்புக் பக்கங்களிலும் ஏற்கனவே பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆனால், இது மொரோக்கோவில் நிகழ்ந்தது இல்லை என்றும், உண்மையில் இது ஏமன் நாட்டில் நிகழ்ந்தது என்றும் கண்டறிந்து, ஃபிரெஞ்ச் மொழியில் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்த விவரம் கண்டோம்.
இதன்படி, ஏமன் நாட்டில் உள்ள Al Mahwit பகுதியில், தந்தை ஒருவர் தனது மகனை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த குற்றத்திற்காக, கைது செய்யப்பட்டிருக்கிறார். அதில் தொடர்புடைய புகைப்படம்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் இருக்கும் சிறுவனின் புகைப்படமும்.
இதுபற்றி ஏமன் ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த 2020, அக்டோபர் மாதம் ஏமனில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இதனைச் சிலர் மொரோக்கோவில் நிகழ்ந்தது என்றும், உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்தது என்றும் கூறி தவறான தகவலை சிலர் பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
அதேசமயம், உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை மத ரீதியான வன்மத்துடன் இளைஞர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகளும், செய்திகளும் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அந்த வீடியோ செய்திக்கும், நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாகிறது.
Timesnow news Link I Telegraphindia Link
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Story updated: March 16, 2021

Title:உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர்; உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False

ஃபேக்ட் கிரெசென்டோ , உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் சம்பவம் நடந்தது உண்மைதான். அது சம்பந்தமான வீடியோவும் உண்மையான வீடியோ பதிவுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த சம்பவம் ஏமனில் நடந்ததாக ஏமாற்ற வேண்டாம். அந்த வீடியோவில் கிளியராக ஹிந்தி மொழியில் உன் பெயர் என்ன , உன் தந்தை பெயர் என்ன, கோவிலுக்குள் எதற்கு வந்தாய் என்று விளக்கம் கேட்டுவிட்டு கோவிலுக்குள் தண்ணீர் குடிக்க வருவாயா என்று ஹிந்தியில் பேசுவது அனைத்தும் கிளியராக கேட்கும்போது இது ஏமனில் நடந்த சம்பவம் என்று ஃபேக்ட் செக் செய்தோம் இது பொய்யான தகவல் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். ஹிந்தி ஏமன் நாட்டின் மொழியா அல்லது மொராக்கோ நாட்டின் மொழியா என்பதற்கு பதில் சொல்லுங்கள். இதுதான் உண்மை கண்டறியும் லட்சணமா ….