FACT CHECK: ஆக்சிஜன் யாருக்குத் தேவை என கண்டறிய ஐந்து நிமிடம் நிறுத்தினோம் என்று யோகி கூறினாரா? – குழப்பம் ஏற்படுத்திய பதிவு!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

உத்தரப்பிரதேசத்தில் யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய நோயாளிகளின் ஆக்சிஜனை ஐந்து நிமிடம் நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் படத்துடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் செய்தி ஒன்றின் தலைப்பு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய.. நோயாளிகளின் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம்.. “உபி.யில் செம ஷாக்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட பதிவை Sathish S Kumar என்பவர் 2021 ஜூன் 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த ஸ்கிரீன்ஷாட் பதிவில் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவருடைய புகைப்படத்துடன் 5 நிமிடம் ஆக்சிஜனை நிறுத்தினோம் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் அவர்தான் நிறுத்தினார் என்பது போன்ற தோற்றத்தை பதிவு ஏற்படுத்துகிறது. தவறான அர்த்தத்தை ஏற்படுத்துவதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.

உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா உயிரிழப்பு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை உச்சத்திலிருந்த நேரத்தில் யாருக்கு உண்மையில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிய ஐந்து நிமிடம் ஆக்சிஜனை நிறுத்தி சோதனை செய்ததாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்பது உண்மைதான். ஆனால், அதற்கும் மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை, மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. இது தொடர்பான ஆதாரங்களைத் தேடினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I oneindia.com I Archive 2

முதலில் இந்த செய்தி எந்த ஊடகத்தில் வெளியானது என்று பார்த்தோம். அப்போது, இது ஒன் இந்தியா தமிழில் வெளியாகி இருப்பது தெரிந்தது. செய்தியின் உள்ளே நாடு முழுக்க கொரோனா உச்சத்திலிருந்தபோது நிகழ்ந்த அவலங்களை குறித்து குறிப்பிட்டிருந்தனர். அவற்றுக்கு இடையே யோகி ஆதித்யநாத் படத்தை வைத்திருந்தனர். மற்றபடி இந்த சோதனையை யோகி ஆதித்யநாத் பரிந்துரை அடிப்படையில் செய்யப்பட்டது என்று எங்கும் குறிப்பிடவில்லை.

தொடர்ந்து தேடியபோது மருத்துவமனை உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின் கொரோனா உச்சத்தில் இருந்த போது மருத்துவமனை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பேசிய வீடியோ கிடைத்தது. அதில் அவர், “ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜனை மாநில முதல்வர் பெற்றுத் தரவில்லை. அதே நேரத்தில் மருத்துவமனையில் பற்றாக்குறையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால், உண்மையில் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய ஐந்து நிமிடங்களுக்கு ஆக்சிஜன் நிறுத்தப்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உண்மையில் பாதிக்கப்பட்ட 22 பேரின் உடல் நீல நிறத்துக்கு மாறவே அவர்களுக்கு மட்டும் உடனடியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது” என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் சோதனை நடத்தப்பட்ட தினத்தில் சோதனை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சோதனையின் போது 22 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் உடல் நீலமாக மாறியது என்று மருத்துவமனை உரிமையாளர் கூறியதை சிலர் மாற்றி திரித்து,  22 பேர் சோதனை நடத்தப்பட்ட நாளில் இறந்தார்கள் என்று பரப்பினர். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பெருந்தொற்று காலத்தில் பீதியைக் கிளப்பினார் என்று மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கிடைத்தன.

இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது உண்மைதான். ஆனால் மாநில அரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. மாநில அரசு உத்தரவிட்டதால் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படவில்லை. மருத்துவமனை தரப்பில் இருந்து மாவட்ட- மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்த பின்னர் இந்த சோதனை செய்யப்பட்டதாக அதன் உரிமையாளர் கூறவில்லை. ஒன் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில் யோகி ஆதித்யநாத் கூறியோ, மாநில அரசு வழிகாட்டுதல்படி இப்படி செய்யப்பட்டது என்றோ கூறவில்லை. உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்தது என்பதால் கட்டுரையின் உள்ளே யோகி படம்  வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தலைப்பையும் செய்தியின் உள்ளே இருந்த யோகியின் படத்தையும் எடுத்து போட்டோ எடிட் முறையில் ஒன்று சேர்த்து யோகி உத்தரவின் பேரில் இந்த சம்பவம் நடந்தது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  இதன் அடிப்படையில் இந்த பதிவு உண்மையான செய்தியுடன் தவறான புகைப்படத்தை வைத்து பகிர்ந்திருப்பதும் அதன் காரணமாக யோகி ஆதித்யநாத் இப்படி செய்தது போன்று தவறான அர்த்தம் வரும் வகையில் அமைந்திருப்பதும் உறுதியாகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க நோயாளிகளுக்கு 5 நிமிடம் ஆக்சிஜன் நிறுத்திய நிகழ்வை யோகி ஆதித்யநாத் கூறியது போன்று தவறான அர்த்தம் வரும் வகையில் பலரும் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter

Avatar

Title:ஆக்சிஜன் யாருக்குத் தேவை என கண்டறிய ஐந்து நிமிடம் நிறுத்தினோம் என்று யோகி கூறினாரா? – குழப்பம் ஏற்படுத்திய பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False