
பீகாரில் 8 வயது சிறுமிக்கும் 28 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பதிவை அனுப்பி இந்த தகவல் உண்மையா என்று கேட்டிருந்தார்.
அதில், சிறுமி போன்று தோற்றம் அளிக்கும் மணப்பெண் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் கீழ், “இதுஒரு கல்யாண போட்டோ மாப்பிள்ளைக்கு 28வயது பெண்ணுக்கு 8 வயது இந்தியா பீகாரில் நடந்த திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு கடுமையான வறுமையாம் அதனால் இந்த திருமணமாம் இதை ஒரு அரபு நாட்டிலோ அல்லது முஸ்லிம் சமூகத்திலோ எங்கவாது நடந்தால் இந்த. ஊடகங்கள் இதுதான் மிகப்பெரிய. முக்கிய செய்தியாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் பகிரப்படுகிறதா என்று பார்த்தோம். அப்போது மே 31, 2021 அன்று இந்த பதிவை Mohamed IliyaShe என்பவர் வெளியிட்டிருந்தார். பலரும் இதை பகிர்ந்து வந்தனர். எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
படத்தில் உள்ள மணப்பெண்ணைப் பார்க்கும் போது சிறுமி போல தெரிகிறது. உண்மையில் அவர் சிறுமிதானா, பீகாரில் இந்த குழந்தை திருமணம் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது ஏபிபி இணையதளம் வெளியிட்ட இந்தி செய்தி ஒன்று கிடைத்தது. அதை மொழி பெயர்ப்பு செய்து பார்த்தோம். அதில், 28 வயது இளைஞருக்கும் 8 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்ததா, உண்மை என்ன?” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: abplive.com I Archive 1 I ibtimes.co.in I Archive 2
8 வயது சிறுமி என்று கூறப்பட்டவரின் பெயர் தனு குமாரி என்றும் அவர் இந்த செய்தியை மறுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். செய்தியை படித்த பிறகு உண்மை புரிந்தது.
சமூக ஊடகங்களில் பீகாரில் எட்டு வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது என்று ஒரு தகவல் வைரலாக பரவியது. இதையடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் இந்த தகவல் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விளக்கம் அளிக்கும்படி பீகார் மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், குழந்தையின் படத்தை வெளியிட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
விசாரணையில் அந்த பெண்ணுக்கு எட்டு வயது இல்லை, 19 வயது என்று தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி அவருக்கு திருமணம் நடந்தது. இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து தன்னுடைய ஆதார் கார்டு ஆதாரத்துடன் தனு குமாரி தன்னுடைய வயது தொடர்பான பிரச்னைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை, பீகார் மாநில் செய்தி விளம்பரத் துறை வெளியிட்ட விளக்கம், தனு குமாரி தன்னுடைய கணவருடன் சேர்ந்து அளித்த விளக்க வீடியோ என பல தகவல் கிடைத்தன.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தியிலும் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பீகாரில் எட்டு வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பீகாரில் 8 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
