
கர்நாடகாவில் அண்ணாமலை பிரசாரம் செய்த தொகுதி ஒன்றில் ஒரு பூத்தில் பா.ஜ.க-வுக்கு வெறும் 10 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு வெறும் பத்து ஓட்டு. கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியில் ஒரு பூத்தில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை Surya Born To Win @Surya_BornToWin என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 மே 13ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மேலிட பொறுப்பாளராக இருந்து பிரசாரம் செய்தவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. மிகப்பொிய அளவில் அண்ணாமலைக்கு வரவேற்பு இருந்ததாகத் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சமூக ஊடகங்களில் களமாடினர். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக இருக்க, பா.ஜ.க மற்றும் அண்ணாமலையைப் பலரும் நையாண்டி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டை வைத்து நையாண்டி செய்தது போன்று ஒரு பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது நையாண்டிப் பதிவு என்று நமக்குத் தெரிகிறது. ஆனாலும், இது உண்மை என்று கருதி பலரும் இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ்கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடுவது போல இல்லை. உண்மையில் இதை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். மே 13, 2023 அன்று இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. எனவே, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு பற்றிக் கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து இது போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவையும் வெளியிட்டனர்.
கிட்டூர் தொகுதியில் ஒரு பூத்தில் பாஜக 10 வாக்குகள் தான் பெற்றது என்று ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் 77,536 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். பா.ஜ.க வேட்பாளரோ 74,543 வாக்குகள் பெற்று 2993 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். சுற்று வாரியாக பெற்ற வாக்குகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், ஒரு பூத்தில் 10 வாக்குகள் மட்டுமே பெற்றதாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 7 தமிழ் உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த தகவல் மற்றும் நியூஸ் கார்டு இரண்டும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கர்நாடகாவில் அண்ணாமலை பிரசாரம் செய்த பகுதியில் பாஜக 10 வாக்குகள் மட்டுமே பெற்றது என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேபக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அண்ணாமலைக்கு வெறும் பத்து ஓட்டு என்று நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
