உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் விழா தொடங்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Dhasarathan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 அக்டோபர் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் பங்கேற்ற ஆட்டம் கடந்த அக்டோபர் 16ம் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த சூழலில் பாகிஸ்தானில் ரசிகர்கள் டிவி-யை உடைத்தனர் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: thesun.co.uk I Archive

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்சிகோ அணி தோல்வியுற்றதைத் தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தொலைக்காட்சியை அடித்து உடைத்தார், அதைக் கத்தியால் குத்தினார் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து மெக்சிகோ வெளியேறியதைத் தாங்க முடியாமல் அவர் அப்படிச் செய்தார் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோ 2022 டிசம்பரில் வைரலாக பகிரப்பட்டது என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2022 டிசம்பரில் மெக்சிகோவில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவை எடுத்து, 2023 அக்டோபரில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும் சூழலில் பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தியாவுடன் தோல்வியடைந்ததால் பாகிஸ்தானில் டிவி-யை உடைக்கும் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False