
6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் ஒன்று தென்னாப்பிரிக்கக் குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive l Youtube
யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் வௌியிட்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தென்னாப்ரிக்காவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டது தெரியுமா? நீங்கள் கேட்டது உண்மைதான். தென்னாப்ரிக்காவில் உள்ள 6000ம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது” என்பது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “எவ்வளவு தான் இந்து மத அடையாளங்களை உலகம் முழுக்க அழித்து ஒழிக்க நினைத்தாலும் அதன் ஆதாரங்கள் தினம் தோறும் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்து மதத்தை அழிக்க முயற்சி நடப்பதாகவும் ஆனால், தென்னாப்பிரிக்காவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவ லிங்கம் இருந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் ஒரு சில விநாடிகள் ஏதோ ஒரு குகை காட்டப்படுகிறது. மற்றபடி வீடியோவில் இடம் பெற்ற காட்சிகள் எல்லாம் இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து, பதிவை உருவாக்கியது போல் இருந்தது. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் தென்னாப்ரிக்காவில் 6 ஆயிரம் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று அறிய கூகுளில் தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. வீடியோவில் சிவலிங்கம் சுத்வாரா (Sudwara Cave) என்ற குகையில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கூகுளில் சுத்வாரா குகை, தென்னாப்பிரிக்கா என்று டைப் செய்து தேடினோம். ஆனால், அந்த பெயரில் குவை எதுவும் தென்னாப்ரிக்காவில் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் சுத்வாலா (Sudwala Caves) என்ற பெயரில் குகை இருப்பது தெரிந்தது. ஆனால் அங்கு சிவ லிங்கம் இருப்பதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
சுத்வாலா குகை தொடர்பாக கூகுளில் தேடினோம். அப்போது அந்த குகை தொடர்பான இணையதள பக்கம் நமக்குக் கிடைத்தது. அதிலும் சிவ லிங்கம் இருப்பதாக எந்த பதிவும் இல்லை. அதில் தொடர்புகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தனர். அந்த மின்னஞ்சல் முகவரிக்கு சுத்வாலா குகையில் 6000ம் ஆண்டு பழமையான சிவ லிங்கம் உள்ளதா என்று கேட்டு இ-மெயில் அனுப்பினோம்.
Stefa என்ற பெயர் கொண்டவர் நமக்கு பதில் அளித்திருந்தார். அவர் அந்த குகை நிர்வாகத்தின் மேலாளர் என்று அந்த குகை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், ‘’சுட்வாலா குகைகளில் எந்த சிவ லிங்கமும் இல்லை. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது” என்று குறிப்பிட்டிருந்தார்.
சரி, வீடியோவில் உள்ள சிவ லிங்கங்கள், சிலைகளில் ஏதாவது ஒன்றாவது தென்னாப்பிரிக்காவைச் சார்ந்ததா என்று அறிந்துகொள்ள ஆய்வைத் தொடர்ந்தோம். முதல் சிவ லிங்கம் புகைப்படம் மகாராஷ்டிராவில் உள்ள Pateshwar Temple சிவ லிங்கம் என்று பதிவுகள் கிடைத்தன. இரண்டாவது சிவ லிங்கம் புகைப்படத்தைப் பல புகைப்பட விற்பனை செய்யும் தளங்கள் விற்பனைக்கு வைத்துள்ளன.
உண்மைப் பதிவைக் காண: shutterstock.com
அதில் அந்த புகைப்படம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள எல்லோரா குகையில் உள்ள சிவ லிங்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற புகைப்படங்களும் இணையத்தில் கிடைத்தன. எதுவும் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்தது என்று குறிப்பிடப்படாமல் இந்தியாவில் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தன.
தென்னாப்பிரிக்காவின் சுத்வாலா குகைகளில் சிவலிங்கம் இல்லை என்று அதன் நிர்வாகி உறுதி செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் எங்கும் 6000ம் ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தியும் இல்லை. வீடியோவில் இடம் பெற்ற புகைப்படங்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள சிவலிங்கங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படங்கள் என்பதை உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தென்னாப்பிரிக்காவில் 6000 பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:தென்னாப்பிரிக்காவில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா?
Written By: Chendur PandianResult: False
