
மசாஜ் செய்துகொண்ட மோடியின் ரகசிய வீடியோ வெளியானது என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வயதான நபர் ஒருவர் முகத்தில் பெண்மணி ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் “பிரதமர் மோடியின் வீடியோ வெளியானது” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “வாழ்றான்யா மனுஷன்… ஜி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி மசாஜ் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ வெளியானது என்று பலரும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வீடியோவில் உள்ள நபரைப் பார்க்கும் போது நரேந்திர மோடி போல தெரியவில்லை. வெள்ளை தாடி உள்ள அனைவரும் நரேந்திர மோடி என்று கூறுவது போல் இருந்தது இந்த பதிவு. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Instagram
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, pradeep kaur dhillon என்ற இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இந்த வீடியோ தொடர்பாக வெளியான விளக்கமளிக்கும் பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. newshourindia என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டிருந்த வீடியோவை ரீஷேர் செய்த பதிவு அது. அதில் வீடியோவில் இருப்பவர் மோடி இல்லை என்றும், pradeep kaur dhillon என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பெண்மணியின் கணவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

pradeep kaur dhillon என்ற அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை தாடி வைத்துள்ள அந்த நபருடன் அந்த பெண்மணி இருக்கும் பல பதிவுகள் இருந்தன. பஞ்சாபிய குடும்பம் ஒன்றின் பதிவு அது என்பது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இல்லை. மோடி என்று குறிப்பிட்டு பலரும் அந்த வீடியோவை பகிரவே, அந்த பதிவை அகற்றியிருக்கலாம் என்று தெரிந்தது. அந்த அகற்றப்பட்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் தளத்திலிருந்து நமக்கு கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: Instagram
அதே நேரத்தில் மசாஜ் மாதிரி வேறு ஒரு வீடியோவும் நமக்குக் கிடைத்தது. மார்ச் 28ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அந்த பதிவில் அந்த வெள்ளை தாடி நபரின் முழு உருவத்தையும் தெளிவாகக் காண முடிந்தது. அது அந்த பெண்மணியின் கணவர்தான் என்பது இதன் மூலம் தெளிவானது. பஞ்சாபிய பெண்மணி ஒருவர் தன்னுடைய கணவருக்கு மசாஜ் செய்த வீடியோவை எடுத்து, நரேந்திர மோடி மசாஜ் செய்து கொண்ட வீடியோ என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சமூக ஊடகத்தில் தன்னுடைய கணவருக்கு பெண் ஒருவர் மசாஜ் செய்துவிட்ட வீடியோவை எடுத்து மசாஜ் செய்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி என்று தவறான தகவல் சேர்த்து பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


