FACT CHECK: பஹ்ரைன் மன்னர் பாதுகாப்பு ரோபோவுடன் வந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சர்வதேசம் தொழில்நுட்பம்

பஹ்ரைன் மன்னர் ரோபோ பாதுகாப்புடன் விமான நிலையம் வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அரேபியர் போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் நடக்க, அவருக்குப் பின்னால் இயந்திர மனிதன் (ரோபோ) நடந்து செல்கிறது. நிலைத் தகவலில், “பஹ்ரைன் நாட்டு மன்னர் தனது 360 கேமராக்கள் மற்றும் கைத்துப்பாக்கி இணைக்கப்பட்டட ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்து இறங்கிய போது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை மக்கள் விருப்பம் பத்திரிகை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 அக்டோபர் 11 அன்று பதிவிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பஹ்ரைன் மன்னர் விமான நிலையத்தில் ரோபோ பாதுகாப்புடன் வந்து இறங்கினார் என்று தகவல் பகிரப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவைப் பார்க்கும்போது விமான நிலையம் போல இல்லை. எக்ஸ்போ கண்காட்சி அரங்கு போல இருந்தது. மன்னர் வருகிறார் என்றால் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வருவார்கள். மன்னர் அருகில் யாரும் சென்றுவிடாமல் பாதுகாப்பு வீரர்கள் இருப்பார்கள். அப்படி யாரும் இந்த வீடியோவில் இல்லை. பலரும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கின்றனர். எனவே இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

ரோபோ நடந்து வரும் தரையில் Etimad Holding LLC என்று இருந்தது. அது என்ன என்று பார்த்தபோது, அபுதாபியில் உள்ள பாதுகாப்பு தொடர்பான நவீன தொழில்நுட்ப கருவிகளை வழங்கும் நிறுவனம் என்று தெரிந்தது. 

வீடியோ காட்சிகளை புகைப்படமா மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, டைட்டன் தி ரோபாட் (Titan the Robot) என்ற பெயரில் இந்த ரோபோவின் பல வீடியோக்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. டைட்டன் தி ரோபோ என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். இது திரைப்படங்கள், கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயாரிக்கப்பட்ட ரோபோ என்றும் இங்கிலாந்தில் உள்ள Cyberstein Robots என்ற நிறுவனம் இதை உருவாக்கியதும் தெரிந்தது. மேலும், நிகழ்ச்சிகளில் டைட்டன் தி ரோபாட்டை பயன்படுத்த முன்பதிவு செய்யும் வசதியும் இருப்பது Cyberstein Robots நிறுவனத்தின் இணையதளத்தை பார்வையிட்டபோது தெரியவந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டில் இதே வீடியோவை சிலர் யூடியூபில் பதிவிட்டிருப்பது தெரியவந்தது. அதில், துபாய் இளவரசரின் பாதுகாப்பு ரோபோ என்று குறிப்பிட்டிருந்தனர். 

துபாயில் டைட்டன் தி ரோபோ என்று முழு வீடியோவும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், அரேபியர் போன்று ஆடை அணிந்த நபரின் பின்னால் நடந்து சென்ற ரோபோ, ஒரு இடத்தில் நின்று கூடியிருந்த மக்களிடம் பேசுகிறது. எல்லோரும் அதனுடன் செல்ஃபி, போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். கிட்டத்தட்ட நடனமாடுவது போன்று அந்த ரோபோ இயக்கப்பட்டிருந்தது. 

பஹ்ரைன் மன்னருக்கு பாதுகாப்பு, பயணம் தொடர்பாக வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் இல்லை. 2017ம் ஆண்டு விளையாட்டு வீரர்களை சந்திக்க அவர் சென்றது தொடர்பான வீடியோ இருந்தது. அதில் உள்ள நபருக்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ரோபோவுக்கு முன்பாக செல்லும் நபருக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை என்பது பார்க்கும்போதே தெரிந்தது.

இதன் மூலம் பஹ்ரைன் மன்னரின் பாதுகாப்பு ரோபோ என பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

பஹ்ரைன் மன்னர் தன்னுடைய பாதுகாப்புக்காக இயந்திர மனிதனை வைத்திருப்பதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பஹ்ரைன் மன்னர் பாதுகாப்பு ரோபோவுடன் வந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False