
தன்னுடைய இதயத்தை தன் மகனுக்கு தந்தை ஒருவர் தானமாகக் கொடுப்பதற்கு முன்பு கடைசியாக பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive I Youtube
நடுத்தர வயதுடைய ஒருவர் அழுதபடியே பேசும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் தந்தை தொடர்பான தமிழ் சினிமா பாடல் ஒன்று ஒலிக்கிறது. வீடியோவின் மேல், “இதயத்தை மகனுக்கு கொடுத்த தந்தை சாகும் முன் கண்ணீர் மல்க வீடியோ காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல சமூக ஊடகங்களிலும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதயத் துடிப்பு சீராக இல்லாத, இதயத்தின் செயல்திறன் முற்றிலும் குறையும் நிலையில் கடைசி நிலையில் உள்ளவர்களுக்குத்தான் இதய மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். அதுவும், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் இதயத்தைக் கொண்டு தான் இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படும். சிறுநீரகத்தைத் தானமாக வழங்குவது போல இதயத்தை எல்லாம் உயிருடன் உள்ள ஒருவர் தானமாக வழங்குவது இல்லை. அப்படி உயிருள்ள ஒருவரிடம் இருந்து இதயத்தை எடுத்தால் அது கொலை குற்றமாகிவிடும். தற்கொலை செய்துகொண்டாலும் கூட அவரது உடல் உறுப்பை மருத்துவர்கள் உடனடியாக எடுத்து அடுத்தவருக்கு பொறுத்திவிட முடியாது.
ஆனால், இங்கு தந்தை ஒருவர் தன்னுடைய இதயத்தை தன் மகனுக்கு தானமாக வழங்கினார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு வாய்ப்பே இல்லையே… எப்படி இது நடந்திருக்க முடியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம். முதலில் இந்த வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2016ம் ஆண்டிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருக்கும் நபர் வெளியிட்டிருந்த வேறு சில வீடியோக்களும் நமக்கு கிடைத்தது. Take 2 The Screen என்ற ஃபேஸ்புக் பக்கம் அந்த வீடியோக்களை பதிவிட்டிருந்தது. அந்த பக்கத்திற்கு சென்று பார்த்த போது, அந்த நபரின் ஏராளமான வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. சுய விவர குறிப்பு பகுதியில் வீடியோ தயாரிப்பு நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் இருப்பது Lewis Saunderson என்ற நடிகர் என்றும் தகவல் கிடைத்தது. அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான வீடியோவும் நமக்கு கிடைத்தது.
அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் தேடல் (Search) பகுதியில் “இதயம், தந்தை, இறக்கும் மகன், கடைசி வார்த்தை” என இந்த வீடியோ தொடர்பான சில அடிப்படை வார்த்தைகளைப் பதிவிட்டுத் தேடினோம். அப்போது நீண்ட வசனத்தை ஒருவர் பேசி நடிக்கும் Monologue இது என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
தொடர்ந்து தேடிய போது சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் இந்த வீடியோவை பாராட்டி வெளியிட்டிருந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டிருந்தனர். அதில், இங்கிலாந்து நடிகர் Lewis Saunderson நடித்திருந்த “இதய மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கும் தன் மகனுக்கான உரை” வீடியோ உண்மையில் ஆஸ்கர் லெவல் நடிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ சீனாவில் 2016-17ல் வைரலாக பகிரப்பட்டிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ உண்மையானது இல்லை, நடிப்புக்காக எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.
இங்கிலாந்து நடிகர் ஒருவர் தன் மகனுக்கு தன்னுடைய இதயத்தைத் தானமாக வழங்குவதற்கு முன்பு பேசிய கடைசி பேச்சு என்று வெளியிட்ட நடிப்பு வீடியோவை, உண்மை என்ற கருதி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இது உண்மையில்லை என்பத உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இங்கிலாந்து நடிகர் ஒருவர் தன்னுடைய தனிநபர் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் எடுத்த ஸ்கிரிப்டட் வீடியோவை தன் மகனுக்கு இதயத்தை தானமாக வழங்கும் தந்தை என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“இதயத்தை மகனுக்கு தானம் கொடுத்த தந்தையின் கடைசி பேச்சு” என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
