
‘’பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.
இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடிப் பிடித்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இதனை ஃபேஸ்புக்கிலும் ஏராளமானோர் ஸ்கிரின்ஷாட் எடுத்து ஷேர் செய்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசு பல்வேறு தடைகளையும் மீறி, கடந்த ஆகஸ்ட், 2021 மாதத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத் திருத்தம் அடிப்படையில், முதல்கட்டமாக, 24 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன உத்தரவை வழங்கியது.
News 18 Tamil Link I BBC Tamil Link
இதையொட்டியே, மேற்கண்ட புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து, பணி நியமன உத்தரவு பெற்றதும், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த புதிய அர்ச்சகர்கள் என்று கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், இவர்கள் பகிரும் புகைப்படம் கடந்த 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். அந்த ட்விட்டர் பதிவில் உள்ள புகைப்படத்திலேயே இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனைக் கூட கவனிக்காமல் பலரும் ஆர்வக் கோளாறில் இந்த தகவலை பகிர்கின்றனர்.

இந்த படத்தின் நடுவில் நிற்பவர் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் ஆவார். இவரது தலைமையில் கடந்த 2010ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வலியுறுத்தி, பெரியார் பிறந்த நாளில் திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.
இதன்போது, வா.ரங்கநாதன் உள்ளிட்டோரை சிலர் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. அதற்காக, அவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படமாகும்.

Vinavu Link I appsa.blogspot.com Link
அதன்பிறகு, வா.ரங்கநாதன் தனது தீட்சையை துறந்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்க வலியுறுத்தி, பல விதமான சட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார். தற்போது கூட, தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்கியதை வரவேற்று அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.

எனவே, 2010ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம் ஒன்றின் புகைப்படத்தை எடுத்து, அர்ச்சகர் பணி நியமன ஆணை பெற்றதும், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அர்ச்சகர்கள் என வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்?
Fact Check By: Pankaj IyerResult: Partly False

அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த உண்மைதானே. அப்படி கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கருவறைக்குள் வருவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் நாளை ஆருயிர் இப்படி எல்லாம் செய்வார்களா? கடவுள் இல்லை என்று சொல்லும் நபர்கள் எங்கள் கலாச்சாரத்தை அழிக்க உள்ள வருகிறார்கள் என்று நாங்கள் சந்தேகப்படுகிறேன் உண்மை இருக்கிறது தானே. தேதி தவறாக இருந்தாலும் கருத்து சரிதானே. இதற்கு நீங்கள் பதில் கூறவும்.