
முகமது நபியை சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூனாக வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த லார்ஸ் வில்க்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
டிரக் ஒன்றில் கீழ் கார் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கொடூரமானது. ஸ்வீடன் மூதேவியின் லார்ஸ் வில்க்ஸ் மரணம் அதற்கு ஒரு சான்று. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீது அவதூறு மற்றும் சித்திரங்கள் வரைந்திருந்த அந்த ஷைத்தானும் அவனது இரண்டு போலீஸ் உடல் காவலர்களுடன் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.
அவன் உதவிக்காக கத்திக் கொண்டிருந்தான் எந்த பாதுகாப்பும் அவனை பாதுகாக்க முடியவில்லை. அவனுக்கு உதவுவதற்கு பல கார்களில் இருந்து 53 தீயணைப்பான்கள் முயற்சித்தும் முயற்சிப்பவர்கள் அனைவரும் இறுதியாக கைவிட்டனர். நான் என் நேசத்திற்குரிய நபியை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் எவரையும் கையாள்வேன் என்று குர்ஆனில் தெளிவாகக் கூறியுள்ளான். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை நிந்தனை செய்பவர்களை நிச்சயமாக ஒரு வகையான தண்டனையை எதிர்கொள்வார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை ஷாமில் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரியும் கொடூரமான வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. இந்த கார் விபத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஓவியர் லார்ஸ் வில்க்ஸ் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, யார் அவர், இந்த வீடியோ உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2014ம் ஆண்டில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
அந்த யூடியூப் பதிவு ஆங்கிலத்தில் இல்லை. யூடியூப் தலைப்பு மற்றும் பதிவில் என்ன சொல்கிறார்கள் என்று மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அது ரஷ்ய மொழி என்பதும், ரஷ்யாவில் 2014ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் தந்தை மற்றும் அவரது இரண்டு மகள்கள் உயிரோடு எரிந்து கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: YouTube 1 I YouTube 2
ஸ்வீடன் ஓவியர் உயிரிழந்தது தொடர்பாக தேடினோம். அப்போது, லார்ஸ் வில்க்ஸ் கடந்த அக்டோபர் 3 அன்று ஸ்வீடனில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கிடைத்தது. 2007ம் ஆண்டு முகமது நபி தொடர்பாக அவதூறான ஓவியத்தை இவர் வரைந்தார் என்றும், அதைத் தொடர்ந்து அவரது தலைக்குப் பல இஸ்லாமிய அமைப்புகள் விலை நிர்ணயித்ததாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்த சம்பவம் விபத்துதான் என்றும், யாரும் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விபத்தை ஏற்படுத்தவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஸ்வீடன் போலீசார் கூறியதாகவும் செய்திகள் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: theguardian.com I Archive 1 I bbc.com I Archive 2
இதன் மூலம் 2014ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த சாலை விபத்து கொடூர வீடியோவை எடுத்து ஸ்வீடன் ஓவியர் விபத்தில் உயிரிழந்தார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஸ்வீடன் கார்ட்டூனிஸ்ட் வாகன விபத்தில் பலியானார் என்று பகிரப்படும் வீடியோ 2014ல் ரஷ்யாவில் நிகழ்ந்த வேறு ஒரு கார் விபத்தின் வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:முகமது நபியை தவறாக வரைந்த ஸ்வீடன் கார்ட்டூனிஸ்ட் கார் விபத்தா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
