
டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட சிராஜ் முஹம்மது என்ற நபரை குஜராத்தில் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கும் நபரை திடீரென்று சிலர் மடக்கிப் பிடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியைப் பிடிக்கும் காட்சி: சிராஜ் முஹம்மத் அன்வர் இவன் டெல்லியில் சி.ஏ.ஏ. விற்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் முக்கிய பங்கு வகித்தவன். போலீஸ் வலையில் சிக்காமல் தலைமறைவு ஆகி விட்டான். இவன் குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்குள்ள ஒரு உணவகத் திற்கு வந்த போது அவனைப் பிடிக்கும் உளவுத் துறை போலீசார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை கோவை I Love Kovai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூலை 1 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
வீடியோவில் உள்ள யாரும் போலீஸ் சீருடையில் இல்லை. எனவே இதில் யார் போலீஸ், யார் குற்றவாளி என்று தெரியவில்லை. இது டெல்லியில் நடந்த சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் செய்ததாக தேடப்படும் நபரை கைது செய்த வீடியோவா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ தொடர்பான செய்திகள் பல நமக்கு கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில், அகமதாபாத் போலீசார் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27, 2021) 29 வயதான வாகனத் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை பதானில் உள்ள ஒரு தாபா (உணவகத்தில்) மடக்கிப் பிடித்தனர். குற்றவாளியைக் கைது செய்த வீடியோ காட்சியை அகமதாபாத் போலீசார் வெளியிட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல்வேறு செய்திகளைப் பார்த்த போது கைது செய்யப்பட்ட நபரின் பெயர் கிஷோர் லுஹார் என்பதும், அவர் மீது வாகனங்கள் திருட்டு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பது, வீடு புகுந்து கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இவருக்கு டெல்லி கலவரத்துடன் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive
இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ குஜராத்தி பிரிவு சார்பில் அகமதாபாத் போலீசை தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது, “வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவருக்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பு இல்லை” என்று உறுதி செய்தனர்.
இதற்கிடையே குஜராத்தில் பரூச் என்ற இடத்தில் டெல்லி கலவரம் தொடர்பாக வேறு யாராவது கைது செய்யப்பட்டார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்போது ஆயுதங்கள் வைத்திருந்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சிராஜ் அன்வர் என்கிற சிராஜை குஜராத் போலீசார் கைது செய்தார்கள் என்ற தகவல் கிடைத்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சிராஜ் மன்சூர் ஆலம் அன்சாரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த நபருக்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக போலீசார் வெளியிட்டிருந்த விளக்கமும் நமக்கு கிடைத்தது.
Archive I indianexpress.com I Archive 2
இதன் மூலம் குஜராத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவனை போலீசார் கைது செய்த வீடியோவை எடுத்து டெல்லி கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது என்று விஷமத்தனமான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குஜராத்தில் குற்றவாளி ஒருவனை போலீசார் மடக்கி கைது செய்த வீடியோவை டெல்லி கலவர வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை குஜராத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனரா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
