
இந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயம் மூலமாகவே பணம் அனுப்புங்கள் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் சுப உதயகுமார் கூறியதாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக ரிபப்ளிக் டிவி வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்தியாவுக்கு எதிராக போராட சர்ச் மூலமாகவே பணம் அனுப்புங்கள். வங்கி கணக்கு வேண்டாம் உதயகுமரின் முகத்திரையை வெளியிட்ட ரிப்பப்ளிக் டிவி…மக்கள் பார்வைக்கு …
ரிபப்ளிக் டிவி வெளியிட்ட ஸ்டிங்க் ஆபரேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பெண் ஒருவருக்கும் உதய குமாருக்கும் இடையேயான உரையாடல் இடம் பெற்றுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவுக்கு எதிராக போராட சர்ச் மூலமாக பணம் அனுப்புங்கள்” என்று உதய குமார் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை, P.Sivakumar என்பவர் 2019 ஜூன் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2017ம் ஆண்டு ரிபப்ளிக் டிவி-யில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் சுப உதயகுமார் போராட்டத்துக்கு பணம் பெற்றார் என்று உண்மை கண்டறியும் ஸ்டிங் ஆக்ஷனை நடத்தியதாகப் பரபரப்பை கிளப்பியது. அதில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதாக உதய குமாரிடம் அறிமுகமாகி உள்ளார் அந்த பெண். அவருக்கு உதய குமார் ஆராய்ச்சி தொடர்பாக உதவிகள் செய்துள்ளார். பின்னர் அவரிடம் அந்த பெண் நிதி உதவி வழங்குவது போல பேசி அதை ஒலி – ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ ரிபப்ளிக் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் நிதி பெற்றேன் என்ற குற்றச்சாட்டை உதய குமார் மறுத்தார். வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவது இல்லை என்றுதான் தெரிவித்தேன் என்று கூறினார். போராட்டத்துக்கு எதற்கு நிதி உதவி என்று உதய குமாரை மடக்கினார் ரிபப்ளிக் டிவி அர்னாப்.
உதய குமார் நிதி உதவி பெற்றது உண்மையா, எவ்வளவு பெற்றார் என்று புலன் விசாரணைக்குள் நாம் நுழையவில்லை. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல, இந்தியாவுக்கு எதிராக போராட சர்ச் (தேவாலயங்கள்) மூலம் பணம் அனுப்புங்கள் என்று உதய குமார் கூறினாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
முதலில் ரிபப்ளிக் டிவி வெளியிட்ட வீடியோவில் நடந்த உரையாடலை ஆய்வு செய்தோம். இருவருக்குமிடையேயான உரையாடல் எழுத்து வடிவில் நமக்கு கிடைத்தது. அதை தமிழாக்கம் செய்தோம்.
அந்த உரையாடல் தமிழாக்கம் பின்வருமாறு:
பெண் நிருபர் “என்னுடைய இங்கிலாந்து பேராசிரியர் நிதி உதவி செய்ய விரும்புகிறார்… எப்படி செய்வது?”
உதய குமார், “வெளிநாட்டு நிதி உதவி பெறுவது இல்லை. நீங்கள், உங்கள் குடும்பத்தினர் நிதி உதவி செய்யலாம்.”
தொடர்ந்து அந்த பெண் நன்கொடை அளிப்பது பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அதற்கு உதய குமார், “எங்களிடம் வங்கிக் கணக்கே இல்லை. எனவே, விரும்பினால் நீங்கள் கட்சிக்கு நன்கொடை அளியுங்கள். அதற்கு நான் உங்களுக்கு ரெசிப்ட் கொடுக்கிறேன். அதன்பிறகு வங்கிக் கணக்கு விவரத்தைக் கொடுக்கிறேன்.” என்கிறார்.
அதற்கு அந்த பெண், “நான் வேண்டுமென்றால் எங்கள் பேராசிரியரிடம் சொல்லி முறையான மின்னஞ்சல் அனுப்பச் சொல்கிறேன்” என்கிறார்.
அதற்கு உதய குமார், “சரி, நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள். வெளிநாட்டில் இருந்து நிதி உதவியை நாங்கள் பெறுவது இல்லை. நீங்கள் விரும்பினால் உங்கள் குடும்பத்தினர், இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் மூலமாக அளியுங்கள்” என்கிறார்.
அதற்கு அந்த பெண், “இது முழுக்க முழுக்க அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்காக அளிக்க விரும்புகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர் அதிகமாக ஆர்வம் கொண்டவர்” என்கிறார்.
“நீங்கள் பணமாக கொடுத்தால் எந்த பிரச்னையும் இல்லை. நீங்கள் வழங்க விரும்பினால், அல்லது நீங்கள் பணம் அனுப்ப விரும்பினால் கட்சியின் வங்கிக் கணக்கை அளிக்கிறேன். ஆனால், அவரால் அனுப்ப முடியாது. நீங்கள் மட்டுமே வழங்க இயலும். இந்தியாவுக்குள் இருக்கும் உங்கள் உறவினர்கள் கொடுக்கலாம். அப்படி கொடுத்தாலும் கூட விசாரணை என்று வந்தால் சிக்கல் ஆகிவிடும். அவர் அளிக்க விரும்பினால் பணமாக கொடுக்கலாம். அதை அடுத்த முறையோ பிறகு எப்போதாவதோ கொடுங்கள்” என்கிறார்.
அதற்கு அந்த பெண், “வேறு வழியே இல்லையா?” என்று கேட்கிறார்.
“இல்லை என்றால் கட்சியின் வங்கிக் கணக்கை அளித்துவிடுவேனே. அதில் இந்தியாவில் இருந்து மட்டுமே பணம் செலுத்த முடியும். அப்போது எந்த பிரச்னையும் இல்லை” என்று உதய குமார் சொல்கிறார்.
அந்த பெண்: “இது பற்றி என்னுடைய பேராசிரியரிடம் சொல்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். எனவே, எந்த ஒரு வழியும் இல்லை இல்லையா… என்னுடைய பேராசிரியர் சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்பாக மிகவும் ஆர்வமாக இருக்கிறார். (அப்படி சொல்லும்போது உதய குமார் இல்லை என்று வேகமாக தலையாட்டுகிறார்) நிதி உதவி வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்” என்கிறார்.
அதற்கு உதயகுமார், “முன்பு வெஸ்டர்ன் யூனியன் மூலமாக நீங்கள் பணம் அனுப்பலாம். ஆனால் இப்போது நான் பணம் பெற்றால் மிகப்பெரிய விசாரணைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கிவிடும்” என்கிறார்.
உடனே அந்த பெண், “அப்படி என்றால் நான் என் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக அனுப்புகிறேன்” என்கிறார். உதயகுமாரோ, “வேண்டுமென்றால் சஞ்சீவி மூலமாக கொடுங்கள். அவர் சென்னையில்தான் இருக்கிறார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்து அவர் கொடுத்துவிடுவார்” என்கிறார்.
இந்த விவாதத்தில் எந்த இடத்திலும், சர்ச் மூலமாக பணத்தை கொடுங்கள் என்று உதய குமார் கூறவில்லை. மேலும், வெளிநாட்டில் இருந்து பண உதவி பெறுவது இல்லை, செய்ய முடியாது என்று மட்டுமே கூறியுள்ளார். நிதி உதவி செய்ய விரும்பினால் கட்சிக்கு அளிக்கலாம் என்றும் கூறுகிறார்.
இந்த வீடியோ ரிபப்ளிக் டிவி-யில் ஒளிபரப்பாகிய பிறகு சுப உதய குமாரிடம் ரிபப்ளிக் டிவி-யில் இருந்து கருத்து கேட்டுள்ளனர். அப்போது, “நான் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற முடியாது என்றுதான் கூறினேன். தவறான தகவலை அளிக்க வேண்டாம். எந்த தேவாலயத்திடமிருந்தும் நாங்கள் எந்த நிதி உதவியையும் பெறவில்லை” என்கிறார். உடன், அர்னாப் கோஸ்வாமி குறுக்கிட்டு பேசுகிறார். அதற்கு உதய குமார், “இது ஒன்றும் விசாரணை நீதிமன்றமோ, நீங்கள் அரசு வழக்கறிஞரோ இல்லை” என்று சூடான பதிலை அளிக்கிறார். அதற்கு அர்னாப், “நீங்கள் ஏன் நிதி உதவியை பெற முன் வந்தீர்கள்” என்று கேட்கிறார். ஆனால் உதய குமார் தன்னுடைய இணைப்பைத் அதற்கு முன்பாகவே துண்டித்திருக்கிறார். வீடியோவும் முடிந்துவிட்டது.
இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். தினமலர் செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், உதய குமாருக்கும், பெண் நிருபருக்கும் இடையே நடந்த உரையாடலின் சிறு பகுதியைச் சொல்லியிருக்கிறார்கள். நேரடியாக “அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தேவாலயங்களின் பங்களிப்பு பெருமளவுக்கு இருந்ததாகவும் கிறிஸ்தவ ஆலயங்கள் மூலமாக நிதி உதவிகள் அளிக்கப்பட்டதாகவும் இந்த ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரத்தில், ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மீது உதய குமார் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் புகார் அளித்ததாக செய்திகள் கிடைத்தன. அதில், தன்னையும் தன் குடும்பத்தினர் பற்றியும் அர்னாப் கோஸ்வாமி அவதூறாக பேசுவதாக குறிப்பிட்டிருந்தார்.
கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் அமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த அணுக் கழிவு மையம் தமிழகத்தில் அமையக் கூடாது என்று போராட்டம் நடைபெறும் சூழல் உள்ளது. அதனால், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் பற்றி இதுபோன்ற தவறான தகவல் பரப்பப்படுவது போல இந்த பதிவு உள்ளது.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
- முழு வீடியோவிலும் சர்ச் மூலமாக பணம் செலுத்துங்கள் என்று எந்த இடத்திலும் சுப உதயகுமார் கூறவில்லை.
- இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த நிதி உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்கவில்லை.
- போராட்டத்துக்கு நிதி உதவி செய்ய வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவர் ஆர்வமாக இருக்கிறார் என்றபோதும் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவது இல்லை என்று அவர் விளக்கமாகவே தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் இருந்து யார் வேண்டுமானாலும் கட்சிக்கு நிதி உதவி அளிக்கலாம், அப்படி அளிப்பவர்களுக்கு கூட ரெசிப்ட் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
- ஸ்டிரிங் ஆபரேஷன் வீடியோவில் பேசியதை உதய குமார் மறுக்கவில்லை. அதை புகாராகவே பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்தியாவுக்கு எதிராக போராட சர்ச் மூலம் நிதி உதவி செய்யுங்கள் என்று உதய குமார் கூறியதாக வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயங்கள் மூலம் பணம் அனுப்ப சொன்ன உதயகுமார்? ஃபேஸ்புக் ஃபோஸ்ட் உண்மை அறிவோம்!
Fact Check By: Praveen KumarResult: False
