சென்னையில் அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் தொண்டர்கள் உணவு உட்கொண்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் நடத்திய உண்ணாவிரதத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "உண்ணும் விரதம் வைரல் போட்டோஸ்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "அட வெக்கங் கெட்டவங்களா இதுக்கு எதுக்கு டா உண்ணாவிரத நாடகம் 🤦‍♂️🤦‍♂️" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பு கூட்டத் தொடரிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை உண்ணும் விரத போராட்டமாக அதிமுக தொண்டர்கள் மாற்றினார்கள் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவில் வரும் புகைப்படத்தை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க உண்ணாவிரதத்தில் உணவு உட்கொண்ட தி.மு.க தொண்டர்கள் என்று வதந்தி பரப்பப்பட்டது. ஆனால், இது அ.தி.மு.க உண்ணாவிரத காட்சி என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவில் தினமலர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இந்த அதன் யூடியூப் பக்கத்தில் "உண்ணும் விரதம் வைரல் வீடியோ" என்று டைப் செய்து தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இந்த வீடியோவை தினமலர் வெளியிட்டிருந்தது தெரியவந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 2018ம் ஆண்டு அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் வீடியோ அது என்று தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: thenewsminute.com I Archive

உண்ணாவிரதம் என்று கூறிவிட்டு அதிமுக தொண்டர்கள் உணவு உட்கொண்டது தொடர்பான வீடியோ உண்மைதான். ஆனால் இது 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது. 2024 ஜூன் 27ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் நடத்திய சூழலில் இந்த வீடியோவை இப்போது எடுக்கப்பட்டது போன்று பகிர்ந்திருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் சில முக்கியமான விவரங்களை மறைத்து வெளியிட்ட பதிவாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2018ம் ஆண்டு அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக-வினர் உணவு உட்கொண்ட புகைப்படங்கள், வீடியோவை 2024ம் ஆண்டு ஜூன் மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சூழலில் சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு விநியோகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Missing Context