
சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பா.ம.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அந்த திட்டத்துக்கு பா.ம.க தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது என்றும் ஒரு கருத்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு பாமக ஆதரவு. ?️?மானங்கெட்ட பிழைப்பு ?️
தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் செந்தில் நடித்த காட்சியை எடுத்து, அதில், செந்திலின் தலைக்குப் பதில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் படம் மார்ஃபிங் செய்யப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது. பார்க்க காமெடி போலத் தெரிந்தாலும், அதில் சொல்லும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்ய வேண்டிய அளவு இருந்தது. அந்த படத்தில், “8 வழிச் சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு… எதிர்ப்பு தெரிவிக்காத பா.ம.க” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, 2019 மே 31ம் தேதி Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு பா.ம.க ஆதரவு! மானங்கெட்ட பிழைப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து இதை எதிர்த்து தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என 35-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை மத்திய பா.ஜ.க அரசு மற்றும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை பாட்டாளி மக்கள் கட்சி மிகக் கடுமையாக விமர்சித்துவந்தது. தேர்தல் நெருங்கிய சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது பா.ம.க. இந்த சூழ்நிலையில்தான் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, தங்களுடைய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். அதேநேரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டு, “இந்த திட்டம் நிறைவேற்றப்படும்” என்று மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே 8 வழிச் சாலைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான் பா.ம.க இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் ஏதாவது கருத்து தெரிவித்துள்ளாரா என்று சமீபத்திய செய்திகளை ஆய்வு செய்தோம். ஆனால் அப்படி எந்த ஒரு அறிக்கையும் அவர் தரப்பில் இருந்து வரவில்லை.
அதேநேரத்தில், எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கை நமக்குக் கிடைத்தது. அந்த அறிக்கையில், “
“சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும் சாலைக்கான நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் நலனைப் பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றேன். தற்போது மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. மத்திய அரசின் சார்பில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்துதான் உச்ச நீதிமன்றத்தில் எனது சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால், உச்ச நீதிமன்றம் எனது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எட்டு வழிச் சாலைத் திட்டம் தேவையில்லை என்பதை முழு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசுக்கு எடுத்துக் கூறுவோம். மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை கைவிடச் செய்ய பா.ம.க போராடும் – வெற்றிபெறும்” என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம், எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு பா.ம.க ஆதரவு அளித்துள்ளது என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு அளித்த பா.ம.க? – நகைச்சுவை என்ற பெயரில் விஷம செய்தி
Fact Check By: Praveen KumarResult: False
