திருட்டு காவலாளி மோடி: தவறான பிரசாரம்!

அரசியல் சமூக ஊடகம்

‘’திருட்டு காவலாளி மோடி’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 3,500க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ள இந்த பதிவு, தொடர்ந்து வைரலாகி வருகிறது. ஆனால், இந்த பதிவில் மோடியை பற்றி கூறியுள்ள விசயங்கள் உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:

திருட்டு காவலாளி மோடி” தன்னை ஓர் ஏழைதாயின் மகன் என்று கூறிகொண்டே! ரேசன் கார்டுக்கும், ஆதார் கார்டுக்கும், வாக்காளர் அடையாள அட்டைக்கும் வரிசையில் நின்று போட்டோ எடுக்கும் போது….படம் பிடிக்கபட்டது!!!!

சூத்திரன் சூத்திரன்தான் பாப்பான் பாப்பான்தான்” ஒரு ஏழை நாட்டுக்கு
இப்படியாபட்ட ஆடம்பரமான பிரதமர் தேவையா??#பாசிசபாஜாகஓழிக காற்றில் விசம் பரவட்டும்….

Archived Link

ஏப்ரல் 2ம் தேதி வெளியான இந்த பதிவில், மோடியை பற்றி விமர்சித்துள்ளது மட்டுமின்றி, அவர் தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர். இது தவிர, இல.கணேசன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் ‘Chowkidar’ என வாசகம் பதித்த டிசர்ட் அணிந்துள்ள புகைப்படம், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் மோடியை கிண்டல் செய்யும் கார்ட்டூன் ஒன்று, ஆகியவற்றையும், இந்த பதிவில் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
முதலில், இந்த பதிவை வெளியிட்டுள்ள நபரின் பின்னணி பற்றி பார்க்க முடிவு செய்தோம். Jamal Mydeen என்ற அந்த நபர், முழுக்க முழுக்க, இஸ்லாமிய ஆதரவாளர் என்று தெரியவந்தது. அத்துடன், அவர் வெளியிடும் பதிவுகள் அனைத்துமே, தீவிர பாஜக எதிர்ப்பு மனோநிலையில் பகிரப்படுவதாகவும் சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டது.

சரி, அவர் பகிர்ந்துள்ள வீடியோ பற்றிய ஆய்வுக்கு வருவோம். அந்த வீடியோ எங்கே, எப்படி எடுக்கப்பட்டது என பலமுறை நாம் விளக்கம் அளித்துள்ளோம். இதுதொடர்பாக, ஏற்கனவே விரிவான ஆய்வு ஒன்றையும் நடத்தி, அதன் முடிவுகளை நம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

லண்டனில் மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் என ஒன்று உள்ளது. அங்கு உலகின் பிரபல தலைவர்கள், சினிமா பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் காட்சிக்காக வைக்கப்படுவது வழக்கமாகும். பிரதமர் மோடியின் சிலையை வைப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடியின் உருவம் பற்றிய துல்லியமான தகவலைத் திரட்ட லண்டன் மெழுகு அருங்காட்சியக ஊழியர்கள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள், பிரதமரின் இல்லம் சென்று, இந்த விவரங்களை பதிவு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது. இந்த வீடியோ மற்றும் இதுதொடர்பான செய்தி, புகைப்படங்கள் 2016ம் ஆண்டிலேயே வெளியாகி வைரல் ஆகியதும் இங்கே குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

மோடியின் மெழுகு சிலை உருவாக்கம் தொடர்பாக லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

மேற்கண்ட வீடியோவை எடிட் செய்து, பிரதமர் மோடி ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைப் பதிவை, வீட்டிலேயே நடத்திவிட்டதாக, பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

இதற்கடுத்தப்படியாக, பாஜக நிர்வாகிகள் ‘Chowkidar‘ வாசகம் பதித்த டி-சர்ட் அணிந்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், சுப்ரமணிய சுவாமியிடம், பிரதமர் மோடி கெஞ்சுவது போன்ற கார்ட்டூனையும் இணைத்துள்ளனர்.

இதில், பாஜக நிர்வாகிகள் இடம்பெற்றுள்ள புகைப்படம், எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என Yandex ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், இல.கணேசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம் உண்மையான ஒன்றுதான், என்றாலும், எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கவில்லை. யாரோ சமூக ஊடகங்களில் பகிர்ந்த புகைப்படத்தை எடுத்து இந்த வீடியோ பதிவுடன் சேர்த்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அத்துடன், இந்த புகைப்படத்திற்கும், குறிப்பிட்ட நபர் மோடியை விமர்சித்துள்ளதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மோடியை விமர்சிக்கும் நோக்கில், பாஜக தொடர்பான எதோ ஒரு புகைப்படத்தை எடுத்து இங்கே பகிர்ந்துள்ளார் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இறுதியாக, சுப்பிரமணிய சுவாமி மற்றும் மோடி இடம்பெற்றுள்ள கார்ட்டூன் பற்றி ஆய்வு செய்தோம். அந்த கார்ட்டூன் பிபிசி தமிழ் செய்தி வெளியிட்ட கார்ட்டூன் என்றும், அதை இங்கே எடுத்து பகிர்ந்துள்ளனர் என்றும் தெரியவந்தது.

இதன்பேரில், பிபிசி தமிழ் இத்தகைய கார்ட்டூன் எதுவும் வெளியிட்டுள்ளதா, என தேடினோம். பிபிசி தமிழ் இணையதளத்தில் இந்த கார்ட்டூன் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், பிபிசி தமிழ் ட்விட்டர் பக்கத்தில், நீண்ட நேரம் முயற்சி செய்து தேடினோம். அப்போது, கடந்த மார்ச் 25ம் தேதி, இத்தகைய கார்ட்டூனை பிபிசி தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் ஷேர் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மேற்கண்ட பதிவிற்கும், அதில் உள்ள புகைப்படங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2) குறிப்பிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதுபோல, அந்த வீடியோ, பிரதமர் மோடி, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பதிவுக்குச் சென்றபோது எடுத்தது இல்லை. அவருக்கு, மெழுகுச் சிலை வைப்பதற்காக, எடுக்கப்பட்ட வீடியோதான் அது.
3) தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, பாஜக.,வையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வீடியோ, புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து, இப்படி பதிவிட்டுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என முடிவு செய்யப்படுகிறது. அதில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு இடையேயும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, இத்தகைய தவறான, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:திருட்டு காவலாளி மோடி: தவறான பிரசாரம்!

Fact Check By: Parthiban S 

Result: False