காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார் என பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா சமூக ஊடகம் விளையாட்டு

காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்றால் ஹிமா தாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காமன்வெல்த் போட்டியின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

“காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்றார் ஹீமா தாஸ்” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. “காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்றார் ஹீமா தாஸ். தடகளப் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Varamilagaai Satheesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 30ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்ட தடகள போட்டியில் ஹிமா தாஸ் வெற்றி பெற்றார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியானதாக இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் காமன்வெல்த் போட்டியில் ஹிமா தாஸ் பங்கேற்கும் ஓட்டப்பந்தயம் எப்போது நடைபெறுகிறது என்று தேடிப் பார்த்தோம். இந்திய தடகள சம்மேளத்தின் இணையதள பக்கத்தில் பார்த்தோம் அதில் ஹிமா தாஸ் 200 மீட்டர் மற்றும் 4X400 M RELAY ஆகியவற்றில் பங்கேற்கிறார் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் போட்டியில்தான் ஹிமா தாஸ் பங்கேற்கிறார் என்று செய்திகள் கிடைத்தன. அப்படி இருக்கும் போது, ஹிமா தாஸ் எப்படி வெற்றி பெற்றார் என்று வீடியோ பரவும் என்று சந்தேகத்தில் வீடியோவை ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: YouTube

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2018ம் ஆண்டு நடந்த உலக அத்லடிக் யு20 சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. 2018ல் நடந்த வேறு ஒரு போட்டியில் ஹிமா தாஸ் வெற்றி பெற்ற வீடியோவை எடுத்து வந்து காமன்வெல்த் போட்டியில் ஹிமா தாஸ் வெற்றி பெற்றார் என்று வதந்தி பரப்பியிருப்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: indianathletics.in I Archive

காமன்வெல்த் போட்டிகளில் தடகளப் பிரிவில் இந்தியா இதுவரை தங்கப்பதக்கம் வென்றதே இல்லை என்பது போல பதிவிடப்பட்டிருந்தது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தடகளப் பிரிவில் 2018ல் நடந்த காமன்வெல்த் போட்டிகள் வரையில் ஐந்து தங்கப்பதக்கங்களைப் பெற்றிருப்பது தெரிந்தது. 2018ம் ஆண்டு போட்டியில் ஒரு தங்கம் பெற்றிருப்பதாக இந்திய தடகள சம்மேளனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த பதிவு முழுக்க முழுக்க தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022 காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றார் என்று பரவும் தகவல் மற்றும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார் என பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False