விஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தினகரன் நாளிதழ் வெளியிட்ட இணைப்பை ஆதாரமாகக் கொண்டு பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டார்: ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு” என்று இருந்தது.

இந்த பதிவை Senthil Karthick‎ என்பவர்  BJP Tamilnadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் (அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை) 2020 மே 4ம் தேதி வெளியிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி நடத்தி வந்த ஜனதா கட்சியில் 2010ம் ஆண்டு வரை செயல் தலைவராக இருந்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டு முறை தேர்வும் செய்யப்பட்டார். முதன் முறை மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடனும், இரண்டாவது முறை மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடனும் எம்.பி-யானார்.

இந்த விவரங்கள் அறியாமல் விஜய் மல்லையாவை காங்கிரஸ் எம்.பி என்று பா.ஜ.க-வினர் பலரும் கூறி வருகின்றனர்.

Facebook LinkArchived Link

இங்கிலாந்தில் சொகுசாக வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் முயற்சியைத் தடுத்து நிறுத்த விஜய் மல்லையா செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. விஜய் மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன. இதனால் அவர் இந்தியாவுக்கு விரைவில் அழைத்து வரப்படுவார் என்று செய்தி வெளியானது.

ஆனால், விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுவிட்டதாகவும், மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது உண்மையா என்று அறிய, தினகரன் வெளியிட்ட செய்தியைப் பார்க்க அந்த பக்கத்துக்குள் நுழைந்தோம். செய்தி அகற்றப்பட்டு இருந்தது. ஆனால், ஃபேஸ்புக்கில் மட்டும் பதிவு அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

Facebook LinkArchived LinkArticle Link

விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்பட்டாரா, அது தொடர்பான செய்தி ஏதும் உள்ளதா என்று பார்த்தோம். அப்போது 2020 ஜூன் 3ம் தேதி வெளியான சில செய்திகள் கிடைத்தன. அதில், விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அடுத்த 28 நாட்களுக்குள் அவரை இந்தியாவுக்கு திருப்பி அழைத்து செல்வதற்கான நடவடிக்கையை முடிக்கவும் உத்தரவிட்டது. மே 15ம் தேதி தீர்ப்பு வெளியானது. கிட்டத்தட்ட 20 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் மல்லையா எந்த நேரமும் இந்தியா அழைத்து வரப்படலாம் என்று செய்தி வெளியாகி இருந்தது. 

livemint.comArchived Link 1
indiatvnews.comArchived Link 2
hindustantimes.comArchived Link 3

மேலும் அந்த செய்திகளில், “இங்கிலாந்து சட்டப்படி பிரச்னை முழுமையாக தீர்க்கப்பட்டால் மட்டுமே ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியும். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் இதில் வெளியே பகிர முடியாத சில சட்ட சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை. பிரச்னை எப்போது தீர்க்கப்படும் என்று உறுதியாக கூற முடியாது. எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்க்க முடியுமோ, அவ்வளவு விரைவாக சரி செய்து மல்லையா இந்தியாவுக்கு திருப்பி அழைத்து வரப்படுவார்” என்று இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தனர். 

பல ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் எப்போது வேண்டுமானாலும் மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வரப்படலாம் என்று கூறியிருந்ததால், சமூக ஊடகங்களில் மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் என்று வதந்தி பரவியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ் ஊடகங்கள் பலவும் மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்; மும்பை சிறையில் அடைக்கப்பட்டார் என்று செய்தி வெளியாகி இருந்தது. பல ஊடகங்கள் அந்த செய்தியை அகற்றிவிட்டன, சில திருத்திவிட்டன. 

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் வழக்கில் மல்லையாவுக்கு கதவு அடைக்கப்பட்டிருந்தாலும், புகலிடம் கேட்டு அவர் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு மனுவை மல்லையா தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மனு மீது இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

economictimes.indiatimes.comArchived Link

இதில் அவருக்கு இங்கிலாந்தில் தங்க வாய்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை நிராகரிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து மல்லையா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம். இதனால், மல்லையா இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான அவகாசம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதையே ரகசிய சட்டச் சிக்கல் என்று இந்திய தூதரகம் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.

விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவாரா, எப்போது வருவார் என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. 2020 ஜூன் 5ம் தேதி நிலவரப்படி விஜய் மல்லையா இங்கிலாந்தில்தான் உள்ளார். அவர் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களிலோ, வாரங்களிலோ, மாதங்களிலோ அவர் இந்தியா அழைத்து வரப்படலாம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போல், 2020 ஜூன் 4ம் தேதி அவர் இந்தியா அழைத்து வரப்படவில்லை, மும்பை சிறையில் அடைக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False