இலங்கை மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ?- உண்மை அறிவோம்

சமூக ஊடகம்

‘’இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

‘நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்’ – இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ#SriLankaAttacks #SuicideBombers #ViralVideo

ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிலர் துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு, தங்களது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருக்க, உணர்ச்சிவசமாகப் பேசுகிறார்கள். தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளில் அவர்கள் பேசும் வீடியோ, தீவிர இஸ்லாமிய கருத்துகளை கொண்டதாக உள்ளது. இந்த வீடியோவை உண்மை என நம்பி, பல ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

ஆனால், மேற்கண்ட வீடியோவை சன் நியூஸ், தனது ஃபேஸ்புக், யூடியூப் பக்கங்களில் இருந்து திடீரென நீக்கிவிட்டதால், இதே வீடியோவை ஷேர் செய்த மற்றவர்களின் பதிவை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

உண்மை அறிவோம்:
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி, ஈஸ்டர் நாளின்போது, கொழும்பு உள்பட பல்வேறு இடங்களிலும் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில், 7 தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக மாறி ஈடுபட்டனர் என்றும், அவர்கள் அனைவரும் தேசிய தவ்கீத் ஜமாத் என்ற தீவிர இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியானது.

இதுதவிர, இடைவெளி விட்டு, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. ஆதார செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சந்தேகப்படும் நபர்கள் யாரும் பதுங்கியுள்ளனரா, என இலங்கை பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், கடைசி நிமிடத்தில் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், திடீரென இந்த வீடியோ பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து சன் நியூஸ் சேனல் நீக்கிவிட்டது. எனினும், சன் நியூஸ் இப்படியான வீடியோ வெளியிட்டதற்கு, கூகுளில் ஆதாரம் உள்ளது. அதுதவிர, சன் நியூஸின் ட்விட்டர் பதிவு இன்னமும் அழிக்கப்படாமலேயே உள்ளது. ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

அத்துடன், சன் நியூஸ் லோகோவுடனே மேலும் சில தனிப்பட்ட நபர்கள் இந்த வீடியோவை ஃபேஸ்புக், யூடியூப்பில் பகிர்ந்து வருகின்றனர். சன் நியூஸின் இத்தகைய முரண்பாடான செயல்பாடு நமக்கு மேலும் சந்தேகத்தை அதிகரிக்கவே, உண்மையில் அப்படி ஏதேனும் வீடியோ வெளியாகியுள்ளதா என கூகுளில் தேடிப் பார்த்தோம்.

அப்போது, இலங்கையின் கிழக்கே கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் தனியார் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை, அந்நாட்டு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது தொடர்பாக, ஒன்இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்றின் இணைப்பு கிடைத்தது.

Archived Link

கல்முனை தாக்குதலின்போது, தீவிரவாதிகள் சிலர் தங்கள் உடலில் குண்டை கட்டி வெடிக்கச் செய்தார்கள் எனவும் கூறப்படுகிறது. அந்த நபர்கள் இறக்கும் முன்பாக, வெளியிட்ட வீடியோ எனக் கூறி, கொழும்புவில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் ட்விட்டர் பதிவை ஒன் இந்தியா இணையதளம் மேற்கோள் காட்டியிருந்தது. எனினும், அது இலங்கை அரசு அல்லது போலீஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு இல்லை.

Archived Link

இதேபோல நியூஸ் ஜே தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி வீடியோ ஒன்றும் கீழே தரப்பட்டுள்ளது.

எனினும், இதுபற்றி வேறு யாரேனும் நம்பகமான வகையில் செய்தி வெளியிட்டுள்ளனரா அல்லது இலங்கை அரசு தரப்பில் எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா என கூகுளில் தேடிப் பார்த்தோம். இதுபற்றி தி இந்து வெளியிட்ட செய்தி ஆதாரம் கிடைத்தது.

அதேசமயம், கல்முனை பகுதியில் நடைபெற்ற ஆர்மி முற்றுகை மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி விரிவான செய்தி ஒன்றை, மிர்ரர் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் எந்த ஒரு இடத்திலும் இப்படியான ஒரு வீடியோவை தீவிரவாதிகள் இறக்கும் முன்பு வெளியிட்டதாக, குறிப்பிடவில்லை. மிர்ரர் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இது நமது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

கல்முனை தாக்குதலின்போது, இலங்கை அரசு, ஏராளமான சமூக ஊடகங்களுக்கு தடை விதித்த காரணத்தால், அதிக தகவல்கள், ட்விட்டர் வழியாக மட்டுமே பகிரப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, கல்முனையில் நடைபெற்ற ஆர்மி தாக்குதல் பற்றி ட்விட்டரில் தேடிப் பார்த்தோம். நாம் சந்தேகப்படும் வீடியோவில் இருக்கும் நபர்களில் ஒருவர் ஐஎஸ் தீவிரவாதிதான் என ஆதாரத்துடன் கூடிய ஒரு ட்விட்டர் பதிவு கிடைத்தது. அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் என்ன ஆனார் எனத் தெரியிவில்லை. கல்முனை தாக்குதலில் கொல்லப்பட்டாலும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Archived Link

இதுதவிர, கல்முனை தனியார் வீட்டில் கொல்லப்பட்ட ஒரு நபரின் உடையும் நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் இருக்கும் நபர்களில் ஒருவரின் உடையும் மாறுபடுகிறது. இதனால், மேன்மேலும் சந்தேகமே அதிகரிக்கிறது.

இதுபற்றி இலங்கை போலீஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று தொடர்பான ட்விட்டர் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கல்முனை முற்றுகையில் உயிரிழந்த தீவிரவாதிகளும், இந்த வீடியோவில் இருப்பவர்களும் ஒன்றுதான் என அடையாளம் காணப்பட்டதாகக் கூறி, எந்த விவரமும் போலீஸ் தரப்பில் கூறப்படவில்லை.

Archived Link

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, வீடியோவில் இருப்பவர்கள் பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களே கிடைக்கின்றன. இதுபற்றி வெளியிட்ட செய்திப் பதிவை சன் நியூஸ் அகற்றிவிட்டதால், இந்த வீடியோவில் ஏதோ ஒரு முரண்பாடான விசயம் இருப்பதாக நம்புகிறோம். இதுபோன்ற உணர்ச்சிகரமான, பதற்றமான சம்பவங்களில், சம்பந்தப்பட்ட அரசு இயந்திரம் அல்லது போலீசார் சொல்வதே இறுதியான கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களில் காட்டப்படுவதை முழுதாக நம்பிவிட முடியாது. எனவே, இந்த வீடியோ உண்மையாகவே இருந்தாலும், இதில் நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.        

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட வீடியோ பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி மற்றவர்கள் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கை மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ?- உண்மை அறிவோம்

Fact Check By: Parthiban S 

Result: Mixture