இந்து மதத்தைப் பற்றி இந்துக்களுக்குக் கற்பிக்கக் கூட இந்துக்களுக்கு உரிமை இல்லை என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுவதாகவும் இந்த பிரிவை நேருதான் சேர்த்தார் என்றும் இதன் காரணமாக பகவத் கீதையை கூட கற்பிக்க முடியாத நிலை உள்ளது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது நிகழ்ந்த சம்பவம் போன்று ஒரு பெரிய கதை எழுதப்பட்டுள்ளது. அதில், " மோடியின் இரண்டாவது அடி வருகிறது - சட்டம் 30 A - நேரு இந்துக்களுக்கு செய்த துரோகத்தை சரி செய்ய மோடிஜி தயாராக இருக்கிறார்.

"சட்டம் 30 A" கேள்விப்பட்டிருக்கிறீர்களா ???? "30 A" என்றால் என்ன தெரியுமா? மேலும் அறிய தாமதிக்க வேண்டாம் ......

30 A என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒரு சட்டம். நேரு இந்த சட்டத்தை அரசியல் சட்டத்தில் சேர்க்க முயன்றபோது, ​​சர்தார் வல்லபாய் படேல் கடுமையாக எதிர்த்தார்.

சர்தார் படேல், “இந்தச் சட்டம் இந்துக்களுக்கு துரோகம் இழைக்கும், எனவே இந்த கவுவன்ஷ் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுவந்தால், நான் அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வேன்... இந்த துரோகத்தை எதிர்த்து போராடுவேன், அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைப்பேன். இதற்கு எதிராக...

இறுதியாக..... சர்தார் படேலின் விருப்பத்திற்கு முன் நேரு மண்டியிட வேண்டியதாயிற்று. ஆனால் துரதிர்ஷ்டவசமாக..

இந்த சம்பவத்திற்குப் பிறகு....ஒரு சில வாரங்களில் சர்தார் வல்லபாய் படேல் இறந்தார். திடீரென எப்படி இறந்தார் என்று இதுவரையில் தெரியவில்லை... ????? கடந்த ஆட்சியாளர்களில் தெரிந்துணர்ந்தவர்கள் வாய் திறக்கவுமில்லை. படேலின் மறைவுக்குப் பிறகு....!!!???? நேரு இந்தச் சட்டத்தை மிகச் சுலபமாக அரசியல் சட்டத்தில் இணைத்தார்.

30 A. இதன் அம்சங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன்... இந்தச் சட்டத்தின்படி - இந்துக்கள் தங்கள் "இந்து மதத்தை" இந்துக்களுக்குக் கற்பிக்க அனுமதி இல்லை. "சட்டம் 30A" அவருக்கு அனுமதியோ அதிகாரமோ கொடுக்கவில்லை. எனவே இந்துக்கள் தங்கள் தனியார் கல்லூரிகளில் இந்து மதத்தைப் போதிக்கக் கூடாது.

இந்து மதத்தை போதிக்க கல்லூரிகள் தொடங்க கூடாது.... இந்து மதத்தை போதிக்க இந்து பள்ளிகளை தொடங்க கூடாது. பொதுப் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் இந்து மதத்தைப் போதிப்பது சட்டம் 30A இன் கீழ் அனுமதிக்கப்படாது.

மேலும் .. இது விசித்திரமாகத் தெரிகிறது, (30A) நேரு தனது அரசியலமைப்பில் மற்றொரு சட்டத்தை உருவாக்கினார் - "சட்டம் 30". இந்த "சட்டம் 30" இன் படி முஸ்லிம்கள் தங்கள் மார்க்க கல்விக்காக இஸ்லாமிய மத பள்ளிகளை ஆரம்பிக்கலாம். முஸ்லிம்கள் தங்கள் மதத்தை போதிக்கலாம்... 30 முஸ்லிம்களுக்குச் சொந்தமாக 'மத்ரஸா' தொடங்குவதற்கான முழு அதிகாரத்தையும் அனுமதியையும் சட்டம் வழங்குகிறது. ..... மற்றும் அரசியலமைப்பின் 30 வது பிரிவு கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த மத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவுவதற்கும் தங்கள் மதத்தை இலவசமாக கற்பிக்கவும் பிரச்சாரம் செய்யவும் முழு அதிகாரத்தையும் அனுமதியையும் வழங்குகிறது...!!

இதில் உள்ள மற்றுமொரு சட்ட அம்சம் என்னவெனில், இந்து கோவில்களின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அரசின் விருப்பத்திற்கே விட்டுவிடலாம்.... இந்து கோவில்களில் இந்து பக்தர்கள் செய்யும் பணம் மற்றும் பிற நன்கொடைகள் அனைத்தையும் அரசு கருவூலத்திற்கு எடுத்துச் செல்லலாம்....

அதே சமயம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மசூதிகளில் இருந்து நன்கொடை மற்றும் அன்னதானம் ஆகியவை கிறிஸ்தவ-முஸ்லிம் சமூகத்தினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த "சட்டம் 30" இன் அம்சங்கள் பின்வருமாறு. எனவே, "சட்டம் 30A" மற்றும் "சட்டம் 30" ஆகியவை இந்துக்களுக்கு வேண்டுமென்றே பாகுபாடு மற்றும் திட்டமிட்ட துரோகம்.

இதை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்... தெரிந்து கொள்ளுங்கள்..... !! மற்றவர்களின் விழிப்புணர்வு ஒவ்வொரு சனத்தின் மார்க்கத்தையும் காப்போம்.. படித்து அறிந்து பரப்புங்கள். ஜெய் ஹிந்த்.. ஷிவோஹம் ஷிவோஹம் ஷிவோஹம்

பிரிவு 30 ஏ காரணமாக, நம் நாட்டில் எங்கும் பகவத் கீதையை கற்பிக்க முடியாது… மேலே உள்ளவற்றை படிக்கவும் ️அவர்கள் யார், ஏன் என்று தெரிந்து கொள்ளலாம்

கூகுள் - விவரங்களுக்குக் கட்டுரை 30A👍🏻 இந்தியாவை நேசிப்போர் இத்தகவலை பரப்புங்கள், ஹிந்து சொந்தங்களே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Balagopal Viswanathan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி பொய்யான அவதூறுகளைப் பரப்புவது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. தற்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆர்டிகிள் 31ஏ என்ற பிரிவை சேர்ந்து இந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய துரோகத்தை நேரு செய்தார் என்று பலரும் சமூக ஊடகங்களில் தகவல் ஒன்றை பரப்பி வருகின்றனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் 31ஏ பிரிவு படி இந்துக்கள் இந்துக்களுக்கே கூட இந்து மதத்தைப் பற்றி கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் அடிப்படையில் பார்த்தால் இந்து மதம் பற்றி பேசினாலே சட்ட விரோதம் என்ற அர்த்தம் வருகிறது.

மேலும், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் பட்டேல், இந்த 31ம் பிரிவை சேர்க்கக் கூடாது என்று தடுத்தார் என்றும், இதனால் நேரு இந்த பிரிவை சேர்க்காமல் இருந்தார் என்றும், ஒரே வாரத்தில் திடீரென்று பட்டேல் மர்மமான முறையில் இறந்ததாகவும் அதன் பிறகே நேரு இதை சேர்த்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவு பல கேள்விகளை எழுப்புகிறது. அவற்றைப் பற்றி எல்லாம் வரிக்கு வரி விளக்கம் எழுதுவதற்குப் பதிலாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 30 ஏ என்ன சொல்கிறது என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: indiankanoon.org I Archive

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ரகசியமான புத்தகம் இல்லை. இதை யார் வேண்டுமானாலும் வாங்கிப் படிக்கலாம். ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. இணையத்தில் இதன் பிடிஎஃப் இலவசமாகவே கிடைக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று அறிய இணையத்தில் அரசு வெளியிட்ட பதிப்பை பார்வையிட்டோம். அதில், இந்துக்கள் தங்கள் மதம் பற்றி பிரசாரம் செய்ய தடை என்று குறிப்பிடவில்லை. இந்த பிரிவானது முழுக்க முழுக்க சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் நடத்தும் உரிமையை மட்டுமே பேசுகிறது.

மத்திய அரசின் சட்டத் துறை இணையதளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் பிடிஎஃப்-ல் இருந்து அந்த பகுதியை நம்முடைய வாசகர்களுக்காக கீழே இணைத்துள்ளோம்.

உண்மைப் பதிவைக் காண: legislative.gov.in I Archive

இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 30: கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் சிறுபான்மையினருக்குள்ள உரிமை!

1) சமயம் அல்லது மொழி எதன் அடிப்படையிலும் சிறுபான்மையினராக உள்ள அனைவரும் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் உரிமை உடையவர் ஆவர்.

1 அ (1A) 1ம் கூற்றில் சுட்டப்பட்டுள்ள சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பெற்றுவரும் ஒரு கல்வி நிறுவனத்தின் சொத்து எதனையும் கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கு வகை செய்கிற சட்டம் ஒன்றை இயற்றுகையில், அச்சொத்தினைக் கையகப்படுத்துவதற்கான அச்சட்டத்தினால் நிர்ணயிக்கப்படும் அல்லது அதன்கீழ் தீர்மானிக்கப்படும் தொகையானது, அந்தக் கூற்றின்படி உத்தரவாதமாக்கப்பட்ட உரிமையினை அருக்கம் செய்வதாகவோ நீக்கறவு செய்வதாகவோ இல்லாதவாறு அரசு உறுதியுறப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2) கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்குகையில், கல்வி நிறுவனம் ஒன்று, சமயம் அல்லது மொழி எதன் அடிப்படையிலும் சிறுபான்மையினராக உள்ளவர்களின் மேலாண்மையில் இருக்கிறதெனும் காரணத்தைக் கொண்டு அதற்கு எதிராக அரசு வேற்றுமை காட்டுதல் ஆகாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Click Here

அரசியலமைப்பு சட்டத்தின் 30வது பிரிவு சிறுபான்மையினர் தங்கள் மதத்தைக் கற்பிக்க அனுமதிப்பதாக கூறவில்லை. சிறுபான்மையினர் என்றால் மத சிறுபான்மையினர் மட்டுமில்லை, மொழி சிறுபான்மையினரும் உள்ளனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப அனுமதித்துவிட்டு, இந்துக்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

சிறுபான்மையினர் என்றால் மதம் மற்றும் மொழி என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. மொழி சிறுபான்மையினர் என்றால் அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பிற மாநில மொழி பேசும் மக்கள் மொழி சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தோடு கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

அடுத்ததாக அரசியலமைப்புச் சட்டத்தை நேரடியாக பிரதமர் நேரு உருவாக்கியது போல பதிவிடப்பட்டுள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சபை 1946ம் ஆண்டில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது. ஆர்டிகிள் 30ஐ இந்திய அரசியல் நிர்ணய சபையானது 1948ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஏற்றது என்று தகவல் நமக்கு கிடைத்தது. 1950 டிசம்பர் 15ல்தான் பட்டேல் மரணமடைந்தார்.


1948 டிசம்பர் 8க்கும் 1950 டிசம்பர் 15க்கும் இடையே, 1949ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையில் அரசியலமைப்புச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 1950 ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆன நிலையில் டிசம்பர் 15, 1950ம் ஆண்டு வல்லபபாய் பட்டேல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் உயிரிழப்பில் மர்மம் உள்ளது என்று எந்த ஒரு செய்தியும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 30ஐ உருவாக்கும் போது அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் இணையத்தில் நமக்கு கிடைத்தன. ஆர்டிகிள் 30க்கு வல்லபபாய் பட்டேல் எதிர்ப்பு தெரிவித்ததாக எந்த குறிப்பும் அதில் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: business-standard.com I Archive

இதன்படி பார்த்தால் ஆர்டிகிள் 30ஐ தவிர்த்துவிட்டு அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை. ஆர்டிகிள் 30ஐ அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க வல்லபாய் பட்டேல் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் தயாராகும் நேரத்தில் வல்லபபாய் பட்டேல் உயிரிழக்கவில்லை. வல்லபாய் பட்டேல் மறைவுக்குப் பிறகு ஆர்டிகிள் 30ஐ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கவில்லை. வல்லபபாய் பட்டேல் உயிரோடு இருக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் ஆர்டிகிள் 30ம் இருந்தது என்பது தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில்,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகிள் 30 தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஆர்டிகிள் 30 (1ஏ)-வில் இந்துக்கள் இந்து மதம் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிக்கத் தடை என்று குறிப்பிடவில்லை. இது முழுக்க முழுக்க மொழி மற்றும் மத சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் நடத்தும் உரிமை மட்டுமே பேசுவது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு வந்து 10 மாதங்கள் கழித்தே வல்லபாய் பட்டேல் உயிரிழந்தது தெளிவாகியுள்ளது.

வல்லபபாய் பட்டேல் உயிரிழந்த பிறகு ஆர்டிகிள் 30 அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை, 1948ம் ஆண்டிலேயே அது சேர்க்கப்பட்டுவிட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு விஷமத்தனமாது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 30வது பிரிவானது மொழி, மத சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் நடத்துவது பற்றி மட்டுமே பேசுகிறது என்பதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 10 மாதங்கள் கழிந்த நிலையிலேயே வல்லபபாய் பட்டேல் உயிரிழந்தார் என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதத்தைக் கற்பிக்க உரிமை இல்லை என்ற பிரிவை நேரு சேர்த்தாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False