
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரத்தை அழித்த இந்திய ராணுவம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கூடாரங்கள் அருகே குண்டுகள் வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஆப்பரேஷன் #சிந்தூர்* தீவிரவாதிகள் கூடாரங்கள் மீது … துல்லியமாக குண்டு வீசி அழித்தது 🔥 *இந்தியா ராணுவம் ❤️* *🔴 ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பெயர் காரணம் என்ன?* பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’
திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள கண் எதிரில் அவர்கள் கணவன் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர். பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என பெயர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தின் காட்சி என்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகள் முகாம்கள் துல்லியமாக குண்டு வீசி அழிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
வீடியோவில் அல் ஜசீரா ஊடகத்தின் லோகோ உள்ளது. எனவே, இந்த வீடியோவை அல் ஜசீரா வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தோம். மே 7, 2025 அன்று அப்படி எந்த வீடியோ பதிவையும் அல் ஜசீரா வெளியிடவில்லை. அதில் உள்ள அரபு எழுத்துக்களைக் கூகுள் டிரான்ஸ்லேட்டரை பயன்படுத்தி மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் இந்தோனேஷிய மருத்துவமனை (المستشفى الإندونيسي – قبل قليل) என்று இருந்தது.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த வீடியோவை 2023ம் ஆண்டில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் காசாவில் உள்ள இந்தோனேஷியன் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடி அல் ஜசீரா ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவையும் கண்டுபிடித்தோம். 2023ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அந்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டிருந்தனர். அதில், இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் இந்தோனேஷிய மருத்துவமனை அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய நடத்திய தாக்குதலின் வீடியோ இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
காசா மருத்துவமனை அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் வீடியோவை பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரம் அழிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
