823 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி 2025ல் வருகிறது என்று பரவும் தகவல் உண்மையா?

False சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அரிய பிப்ரவரி இந்த 2025ம் ஆண்டு நிகழ்கிறது. இந்த பிப்ரவரியில் தான் எல்லா கிழமைகளுக்கும் சமமான நாட்கள் உள்ளன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

2025 பிப்ரவரி மாத நாட்காட்டி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வரும் பிப்ரவரி என்பது இப்போது வாழும் எவரும் பார்க்கக்கூடிய கடைசி பிப்ரவரி.

ஏனென்றால், 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடப்பது இந்த ஆண்டு பிப்ரவரியில் உள்ளது. வரும் பிப்ரவரியில் உள்ளது: 4 ஞாயிறு, 4 திங்கள், 4 செவ்வாய், 4 புதன், 4 வியாழன், 4 வெள்ளி, 4 சனிக்கிழமைகள் இருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் வரும் என்பதும் அந்த ஆண்டு மட்டும் பிப்ரவரி மாதம் 29 நாட்களைக் கொண்டிருக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனாலும் கூட லீப் அல்லாத ஆண்டுகளில் இப்படி பிப்ரவரி மாதம் தொடர்பான வதந்தி சமூக ஊடகங்களில் பரவுவது தொடர்கதையாக உள்ளது. 

2022ம் ஆண்டு இப்படி வதந்தி கிளம்பியது. இது தொடர்பாக ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். 24ம் ஆண்டு லீப் வருடம் என்பதால் இந்த வதந்தி எழவில்லை. இப்போது மீண்டும் வழக்கமான ஆண்டு வந்திருப்பதை தொடர்ந்து 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய அரிய பிப்ரவரி மாதம் என்ற வதந்தியைப் பலரும் பரப்பத் தொடங்கியுள்ளனர்.

லீப் ஆண்டு தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பிப்ரவரிக்கு 28 நாட்கள் மட்டுமே. 28ஐ 7 (நாட்கள்) ஆல் வகுத்தால் 4 வரும். அதன் அடிப்படையில் அந்த மாதத்தின் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் சமமான நாட்கள் வரும். அதாவது நான்கு ஞாயிறு, 4 திங்கள், 4 செவ்வாய், 4 புதன், 4 வியாழன், 4 வெள்ளி, 4 சனிக் கிழமைகள் வரம். லீக் ஆண்டில் 29 நாள் வரும் என்பதால் ஒரு கிழமைக்கு மட்டும் கூடுதலாக ஐந்து நாட்கள் வரும். இது பொதுவான ஒன்று தான். 

2024ம் ஆண்டு லீப் ஆண்டு. இதைத் தொடர்ந்த வரும் 2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளில் வரும் பிப்ரவரி மாதங்கள் 28 நாட்களை கொண்டிருக்கும். இந்த மூன்று வருடங்களிலும் அதே நான்கு ஞாயிறு முதல், நான்கு சனிக்கிழமைகள் தான் வரும். 2028ம் ஆண்டு மீண்டும் லீப் வருடம் என்பதால் அந்த ஆண்டு மட்டும் பிப்ரவரி மாதம் 29 நாட்களைக் கொண்டிருக்கும். எனவே, ஏழு கிழமைகளும் சரிசமமான நாட்களைக் கொண்டிருக்கும் ஆண்டைக் காண 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அடுத்த ஆண்டும் கூட அனைத்து கிழமைகளும் நான்கு நாட்களை கொண்டிருக்கப் போகிறது. 823 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது தவறான தகவல், வெறும் வதந்தி என்பது அடுத்த நான்கு ஆண்டு நாட்காட்டிகளைக் காண்பதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். 

2025 உடன் 823ஐ கூட்டினால் 2848 வருகிறது. அந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் தொடர்பாக தேடிப் பார்த்தோம். அது லீப் வருடம் என்பதால் அந்த ஆண்டில் மட்டும் சனிக் கிழமைக்கு ஐந்து நாட்கள் வருகிறது. இதில் புதுமை எதுவும் இல்லை. ஒவ்வொரு லீப் வருடத்திலும் வரும் விஷயம்தான்.

கிழமைகளில் கூட 2025ம் ஆண்டு மற்றும் 2848ம் ஆண்டு பிப்ரவரி ஒத்துப்போகவும் இல்லை. 2025ம் ஆண்டு அனைத்து கிழமைகளும் நான்கு நாட்களை கொண்டிருக்கிறது. 2848ம் ஆண்டு பிப்ரவரியில் ஐந்து சனிக்கிழமை வருகிறது. எனவே, 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அரிய நிகழ்வு என்பது எல்லாம் வெறும் வதந்தி என்பது உறுதியாகிறது.

முடிவு:

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி மாதம் 2025ம் ஆண்டு வருகிறது என்று பரவும் தகவல் வெறும் வதந்தி என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:823 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி 2025ல் வருகிறது என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False