
தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை. ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் உரையையும் புறக்கணித்தது அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறு ஒன்றும் இல்லை – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2025 ஜனவரி 6ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. அன்று ஆளுநர் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்தையும், ஆளுநர் உரையையும் அவர் புறக்கணித்ததில் தவறில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக சிலர் நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு பார்க்க புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே உள்ளது. முன்பு வாட்டர்மார்க் லோகோ பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி அப்படி எந்த ஒரு தனித்துவமான அடையாளங்களையும் பயன்படுத்தாததால் இது உண்மையா, போலியா என்பதை எளிதில் கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அப்படிக் கூறியதாக எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ஜனவரி 6ம் தேதி காலை 11.04 மணிக்கு வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த நாளில், அந்த நேரத்தில் புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை.
ஒருவேளை இதை வௌியிட்டுவிட்டு, பின்னர் அகற்றிவிட்டார்களா என்று அறிய, புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி அவரது கருத்தைக் கேட்டோம். இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை, இது போலியான நியூஸ் கார்டுதான் என்று அவரும் உறுதி செய்தார்.
ஜனவரி 6ம் தேதி சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க-வினர் வெளியேற்றப்பட்டனர். பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியைத் தேடி எடுத்தோம். அண்ணா பல்கலைக் கழக மாணவி சம்பவம் தொடர்பாக அவர் பேசினார். ஆளுநர் வெளியேறியது தொடர்பாக (வீடியோவின் 56.35வது நிமிடத்தில்) நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒவ்வொரு முறையும் என்ன மரபை கடைப்பிடிக்கிறார்களோ அதே முறையைத்தான் தமிழ்நாடு சட்டப்பேரவை கடைபிடிச்சிட்டு வருது” என்று கூறுகிறார். முழு பேட்டியில் எங்கேயும் ஆளுநர் செய்ததில் தவறில்லை என்று கூறவில்லை.
உண்மையில் அப்படிக் கூறியிருந்தால் அது அனைத்து ஊடகங்களிலும் பெரிய அளவில் வெளியாகி இருக்கும். குறைந்தபட்சம் தி.மு.க ஆதரவு ஊடகங்களிலாவது வந்திருக்கும். தினகரன் நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியை பார்த்தோம். அதில் கூட ஆளுநர் செய்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஆளுநர் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
