FACT CHECK: பிரேசிலில் அரசியல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றிய பணம் காட்சிக்கு வைக்கப்பட்டதா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

பிரேசிலில் ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4 பில்லியன் டாலர் பணம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

சாலையின் நடுவே கட்டக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தின் வீடியோ காட்டப்படுகிறது. நிலைத் தகவலில், “இது ஒரு கட்டிடம் அல்ல, பிரேசில் அரசாங்கம் அதன் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து மீட்டெடுத்த 4 பில்லியன் டாலர்கள், பணம் பொது இடத்தில் மக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Dhana Sekaran என்பவர் 2020 அக்டோபர் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஊழல் மலிந்த நாடுகளில் ஒன்று பிரேசில் என்பதாலும் வீடியோவைப் பார்க்க அசல் பணம் போலவும் இருப்பதால் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

வீடியோவை முழுவதும் பார்த்தபோது காவலர் ஒருவர் கூட அருகில் இல்லை. துளி பாதுகாப்பு இன்றி இவ்வளவு பெரிய தொகையை காட்சிக்கு வைப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த வீடியோவை ஊழல் பணம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பகிர்ந்து வந்திருப்பதை காண முடிந்தது.

2017ம் ஆண்டு இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி இருப்பது தெரிந்தது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்துப் பல செய்திகள் வெளியாகி இருப்பது தெரிந்தது.

போர்த்துக்கீசிய மொழியில் இருந்த செய்தியை மொழி பெயர்த்து பார்த்தோம். அதில், லாவா ஜாடோ திரைப்படம் வெளியாவதைத் தொடர்ந்து குரிடிபாவில் போலி பணத்தை மலை போல குவித்து வைத்துள்ளனர்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. 

அசல் பதிவைக் காண: acordacidade.com.br I Archive

2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊழல் பணத்தை கைப்பற்றும் லாவா ஜாடோ நடவடிக்கையின் கீழ் 4 பில்லியன் பணம் கைப்பற்றப்பட்டதை குறிக்கும் வகையில் இந்த போலி நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த “Polícia Federal – A Lei É Para Todos” படம் செப்டம்பர் 7ம் தேதி (2017ம் ஆண்டு) திரைக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: wsj.comI Archive I terra.com.br I Archive 2

பிரேசில், போலீஸ் ஃபெடரல், ஊழல் பணம், திரைப்படம் போன்ற கீ வார்த்தைகளை அடிப்படையாக வைத்து கூகுளில் தேடிய போது, வால்ஸ்ட்ரீட் ஜேர்னல், ராய்ட்டர் உள்ளிட்ட ஊடகங்கள், செய்தி நிறுவனங்களில் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

இந்த கீ வார்த்தைகளை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் போர்த்துக்கீசிய மொழிக்கு மாற்றம் செய்து தேடிய போது, இது தொடர்பாக அந்த நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி, வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம், பிரேசிலில் ஊழல் வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியானது.

g1.globo.com I Archive

நம்முடைய ஆய்வில்,

இந்த வீடியோ பிரேசில் மொழி திரைப்படத்தின் பிரமோஷனல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் விளம்பரத்துக்காக காட்சிப்படுத்தப்பட்ட போலி நோட்டுக்கள் என்று வெளியான செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் அடிப்படையில், பிரேசிலில் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நான்கு பில்லியன் பணம் பொது மக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக, பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், வீடியோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது பிரேசிலில் ஊழல்வாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் இல்லை என்பதும், இது திரைப்படம் ஒன்றின் பிரமோஷன் ஏற்பாடு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரேசிலில் அரசியல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றிய பணம் காட்சிக்கு வைக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False