நாடாளுமன்றத்தில் மோடியை நேரடியாக எதிர்த்த ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

மோடியின் கண்களைப் பார்த்துப் பேசிய ராகுல் காந்தி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் இடத்திற்கு சென்று ராகுல் காந்தி வாக்குவாதம் செய்தது போன்று ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதைத்தான் சிங்கம் என்பார்கள், கண்களைப் பார்த்துப் பேசுபவர் #ராகுல்காந்தி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மக்களவைக்குள்ளே பிரதமர் மோடியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மோதலில் ஈடுபட்டது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்த செயலைத்தான் சிங்கம் (வீரம் மிக்கவர்) என்று சொல்வார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் உண்மையானது என்ற அர்த்தத்தில் பதிவிட்டிருப்பதைக் காண முடிகிறது.

நாடாளுமன்றத்தின் அவைக்குள் தொலைக்காட்சிகளின் கேமராக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால், மோடியுடன் ராகுல் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அனைத்து ஊடகங்களும் மோடியின் இருக்கைக்கு அருகே சென்று ஒளிப்பதிவு செய்தது போன்று புகைப்படம் உள்ளது. இதுவே இந்த புகைப்படம் போலி என்பதை உறுதி செய்கிறது.

மேலும், மோடியும் ராகுல் காந்தியும் இப்படி மோதிக்கொள்ளவே இல்லை. ஒரே ஒரு முறை ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் இடத்திற்கே சென்று அவரை கட்டிப்பிடித்த சம்பவம் தான் நடந்துள்ளது. புகைப்படத்தைப் பார்க்கும் போது இது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடந்தது போல் இல்லை. பழைய மக்களவையில் நடந்தது போன்று காட்டியுள்ளனர். மோடியின் மேசை வழக்கமாக அவைத் தலைவரைப் பார்த்தது போல் இல்லாமல் திரும்பியிருக்கிறது. அவரது மேசையின் ஒலிபெருக்கிகள் வேறு பக்கம் திரும்பி உள்ளன. மோடியின் இருக்கைக்கு எதிரேயே ராகுல் காந்தியின் இருக்கை உள்ளது போன்று உள்ளது. ராகுல் காந்தி அருகே இருக்கும் இரண்டு உறுப்பினர்களின் முகத்தோற்றம் ஒன்றாக இருக்கிறது. இவை எல்லாம் இந்த புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தின.

இது ஏஐ புகைப்படமா என்பதை அறிய thehive.ai என்ற இணையதளத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து பார்த்தோம். அது 99 சதவிகிதம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதுதான் என்று உறுதி செய்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சிங்கம் போல மோடியை கண்ணுக்கு எதிரே நேரடியாக எதிர்த்த ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது, இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:நாடாளுமன்றத்தில் மோடியை நேரடியாக எதிர்த்த ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply