
ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச போலீசார் தரதரவென இழுத்துக்கொண்டு சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவை காண: Facebook I Archive 1 I Archive 2
முகக் கவசம் அணிந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் போலீசார் அவரை இழுத்துக்கொண்டு செல்கின்றனர். நிலைத் தகவலில், “Z+ பாதுகாப்பில் இருக்கும் ராகுல்காந்தியை கழுத்தில் கைவைத்து தள்ளுகிறது பயங்கரவாதி யோகியின் போலீஸ். இந்திய ஒன்றியத்தை ஆண்ட பரம்பரையின் வாரிசு,நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன…? வீழட்டும் சங்பரிவார் பாசிசம்…. அழியட்டும் மோடியின் நாஜி அரசு..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Mohammed Ghouse என்பவர் 2020 அக்டோபர் 3 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோ தெளிவின்றி உள்ளது. மேலும் முகக் கவசம் அணிந்திருப்பதால் போலீசுடன் வாக்குவாதம் செய்யும் நபர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், அது ராகுல் காந்தி என்று ஃபேஸ்புக் பதிவாளர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.
ஹாத்ராஸ் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு ராகுல் காந்தி செல்ல முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ராகுல் காந்தி தாக்கப்பட்டார் என்று பலரும் இந்த வீடியோவை ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இவற்றுக்கு நடுவே ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ செப்டம்பர் 30, 2020 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில், “பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவ நேற்று டெல்லி சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அஜய் தத் சென்றார். அவரிடம் தவறாக நடந்து கொண்ட போலீசார். பாதிக்கப்பட்ட நபரின் உடலைப் பெற்றோர் ஒப்புதலின்றி பதிவு எண் இல்லாத வாகனத்தில் வைத்து போலீசார் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவை காண: Facebook I Archive
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அஜய் தத் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பாக ஏதாவது பதிவிட்டுள்ளாரா என்று தேடினோம். அப்போது அவர் அக்டோபர் 3ம் தேதி இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், “சஃப்தார்ஜ்ங் மருத்துவமனையில் தலித் சகோதரி உயிரிழந்த பிறகு மருத்துவமனையில் இருந்த ஹாத்ராஸ் போலீசார் அவரது குடும்பத்தினரை தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். அந்த இளம் பெண்ணின் உடலை பதிவு எண் கூட இல்லாத வாகனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தனர். இது தொடர்பாக டி.சி.பி, ஏ.சி.பி, எஸ்.எச்.ஓ-விடம் கேட்ட போது அவர்கள் என்னை தாக்கினர். டெல்லி துணை நிலை ஆளுநர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தபோது அவுட் லுக் இந்தியா, நியூஸ் 18 என பல ஊடகங்களில் இந்த வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியாகி இருந்தது.

இதன் மூலம் வீடியோவில் இருப்பது ராகுல் காந்தி இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச போலீசார் ராகுல் காந்தியைத் தாக்கிய காட்சி என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், வீடியோவில் இருப்பது ராகுல் காந்தி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராகுல் காந்தியை இழுத்துச் சென்ற உ.பி போலீஸ் என பரவும் தவறான வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
