பாகிஸ்தானில் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சர்வதேசம்ச மதம்

பாகிஸ்தானில் தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்று உணவுப் பொருட்களை வாங்குவதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மசூதி ஒன்றை மக்கள் இடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பாகிஸ்தானில், மசூதியை இடித்து அதில் உள்ள இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்கின்றனர், சமீபத்தில் இடிக்கப்படும் 3வது மசூதி இதுவாகும். (அல்லாஹ்) நமக்கு உணவு தரவில்லை என்றால் மஸ்ஜித்களின் தேவை என்று இஸ்லாமியர் கோபத்தில் இடிக்கிறார்கள், இஸ்லாமியர் இந்தியாவில் முன்னொரு காலத்தில் இந்து கோயிலை இடித்தார்கள், தற்போது அவர்கள் அவர்களுடைய மசூதி இடிக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Srinivasan Rss என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2023 பிப்ரவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாகிஸ்தானில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் மக்கள் மசூதியை இடித்து கற்கள், இரும்பை விற்பனை செய்து உணவுப் பொருட்களை வாங்குகின்றனர் சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை உயிருக்கும் மேலாக மதிப்பவர்கள். அவர்கள் மசூதியை இடித்தார்கள் என்று கூறுவது நம்பும் வகையில் இல்லை. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பாகிஸ்தான் கராச்சியில் உள்ள அகமதியா பிரிவு இஸ்லாமியர்களின் மசூதி தாக்கப்பட்டது என்று கூறி செய்திகள் வெளியாகி இருப்பது தெரிந்தது. அகமதியர்களை இஸ்லாமியர்கள் என்று மற்ற பிரிவு இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. எனவே, அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கராச்சி, அகமதி மசூதி, தாக்குதல் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: wionews.com I Archive 1 I dawn.com I Archive 2

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் உள்ளிட்ட பல ஊடகங்களும் இந்த செய்தி மற்றும் வீடியோவை 2023 பிப்ரவரி 3ம் தேதி வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் பாகிஸ்தானில் வறுமை காரணமாக மக்கள் மசூதியை இடித்து, செங்கல், இரும்பை சேகரித்து விற்று வாழ்க்கை நடத்துகின்றனர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

அகமதியா:

அகமதியா என்பது இஸ்லாமிய சீர்திருத்த இயக்கமாகும். மிர்சா குலாம் அகமது என்பவர் இதை ஏற்படுத்தினார். இவர் தன்னை முகமது நபிக்குப் பிறகு வந்த இறைத்தூதர் என்று அறிவித்துக்கொண்டார். முகமது நபியே கடைசி இறைத் தூதர் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதற்கு மாறாக மிர்சா குலாம் அகமது தன்னைத்தானே இறைத் தூதர் என்று அறிவித்துக்கொண்டதால் அவரை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. அது மட்டுமின்றி அகமதியாக்களை இஸ்லாமியர்கள் என்று கூட ஏற்றுக்கொள்வது இல்லை. 

பாகிஸ்தானில் அதிக அளவில் அகமதியாக்கள் வசிக்கின்றனர். அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக அகமதியாக்களின் வழிபாட்டுத் தலங்களில் உள்ள குரான் வசனங்கள் மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையான குவிமாடங்களை இடித்து அகற்றுவது பாகிஸ்தானில் தொடர்கதையாக உள்ளது. அவ்வப்போது, இப்படி சம்பவங்கள் நடப்பதாக செய்திகளை காண முடிந்தது. போலீஸ் பாதுகாப்புடன் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பது தொடர்பான செய்தியும் நமக்கு கிடைத்தன.

முடிவு:

பாகிஸ்தானில் அகமதியா இஸ்லாமிய பிரிவினரின் வழிபாட்டுத் தளத்தை சிலர் தாக்கிய வீடியோவை பாகிஸ்தானில் பொருளாதார சீரழிவு காரணமாக மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்று உணவுப் பொருட்கள் வாங்கும் மக்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாகிஸ்தானில் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False