புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது ராமர் புகைப்படம் காண்பிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது ராமர் தெரிவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "ஒரிஜினல் முஸ்லிம்கள் வாழும் துபாய் புர்ஜ் கலிபாவில் ஜெய் ஸ்ரீ ராம்!!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரிஜினல் முஸ்லிம்கள் வாழும் துபாயில் என்று பதிவிடப்பட்டிருந்தது. ஒரிஜினல் இந்து, ஒரிஜினல் முஸ்லிம், ஒரிஜினல் கிறிஸ்தவர் என்பதை எல்லாம் எப்படி அளவிடுகிறார்களோ... இந்த புகைப்படம் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை பல ஊடகங்களும் போட்டிப் போட்டு பதிவிட்டு பிறகு உண்மை தெரிந்து மறுப்பு பதிவு வெளியிட்டிருப்பதைகாண முடிந்தது. அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை அப்படியோ வேறு சிலர் இஸ்ரேல் கொடியுடன் பகிர்ந்திருப்பதையும் காண முடிந்தது. எனவே, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

அப்போது, 2019ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி juliasalbum.com என்ற இணையதளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உண்மையான புகைப்படம் பகிரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஒரே கட்டிடத்தின் புகைப்படம்தான் என்றாலும் அடுத்த நொடியிலேயே அதன் விளக்குகள், மனிதர்கள், வாகனங்கள் நடமாட்டம் ஆகியவற்றில் சிறிய மாற்றமாவது ஏற்பட்டுவிடும். ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்திலும், 2019ம் ஆண்டு வெளியான உண்மையான புகைப்படத்திலும் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. ஒவ்வொரு தளத்திலும் எந்த எந்த அறையில் எல்லாம் விளக்குகள் எரிகின்றனவோ அது சரியாக உள்ளது. இரண்டு புகைப்படத்திலும் ராமர் புகைப்படம் தவிர்த்து எந்த ஒரு வித்தியாசத்தையும் காண முடியவில்லை.

உண்மைப் பதிவைக் காண: Instagram

இதே புகைப்படத்தை பயன்படுத்தி மலையாள நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய திரைப்படம் ஒன்றிற்கு விளம்பர பதிவு வெளியிட்டிருந்ததையும் இன்ஸ்டாகிராமில் காண முடிந்தது. மேலும் பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கும் சூழலில், புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிரச் செய்யப்பட்டிருந்தால் அது பற்றி கட்டாயம் அரபு ஊடகங்களில் செய்தி வந்திருக்கும். ஆனால், புர்ஜ் கலிஃபாவில் ராமர் உருவம் காட்டப்பட்டதாக அரபு ஊடகங்கள் எதிலும் செய்தியும் இல்லை.

நம்முடைய ஆய்வில் புர்ஜ் கலிஃபாவில் ராமர் புகைப்படம் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் ஒளி, ஒலி காட்சியில் ராமர் புகைப்படம் காட்டப்பட்டது என்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புர்ஜ் கலிஃபாவில் ராமர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered