ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லையா?
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பழங்குடி சமூகத்தவர் மற்றும் கைம்பெண் என்பதாலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு 2024 ஜனவரி 22ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "திரௌபதி முர்முவிற்கு அழைப்பில்லை. குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் பழங்குடி சமூகத்தவர் மற்றும் விதவை என்பதால் திரௌபதி முர்மு அவர்களை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை - கோயில் நிர்வாகம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவில்லை. அதை வைத்து அவரை கோவில் நிர்வாகம் அழைக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அவர் சார்ந்த சமூகம் மற்றும் கைம்பெண் என்பதால் அவர் அழைக்கப்படவில்லை என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கோவில் நிர்வாகமே இந்த காரணத்தால் தான் அழைக்கவில்லை என்று விளக்கம் அளித்ததாகவும் அதை புதிய தலைமுறை நியூஸ் கார்டு வடிவில் வெளியிட்டதாகவும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அப்படி ஒரு காரணம் இருந்தாலும் எல்லோரும் சமம் என்று கருதும் இன்றைய காலகட்டத்தில் வெளிப்படையாக இப்படி யாரும் கூற மாட்டார்கள். மேலும், கோவில் நிர்வாகம் அப்படி கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில், 22 ஜனவரி 2024 காலை 10 மணிக்கு இந்த நியூஸ் கார்டு வௌியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 22ம் தேதி திரௌபதி முர்மு தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் நமக்குக் கிடைக்கவில்லை. உண்மையில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுவிட்டு அழித்து விட்டதா அல்லது யாரோ சமூக விரோதி நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டுள்ளாரா என்று அறிய புதிய தலைமுறை செய்திக் குழுவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதன் மூத்த நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம்.
அவரும் "இது போலியானது, புதிய தலைமுறை வெளியிட்டது இல்லை" என்று உறுதி செய்தார்.
உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive
அடுத்ததாக திரௌபதி முர்முவுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டதா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். கூகுளில் இது தொடர்பாக சில அடிப்படை வார்த்தைகளை தட்டச்சு செய்து தேடினோம். அப்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு அளிக்கப்பட்ட செய்தி நமக்கு கிடைத்தது. விஷ்வ இந்து பரிஷத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. 2024 ஜனவரி 12ம் தேதியே அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் குடியரசு தலைவர் கையில் ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் இருப்பதைக் காண முடிகிறது. இதன் மூலம் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்ற தகவலே தவறானது என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பழங்குடியினர் என்பதால் திரௌபதி முர்முவை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என ராமர் கோவில் நிர்வாகம் விளக்கம் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லையா?
Written By: Chendur PandianResult: False