ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு வைகோ சால்வை அணிவித்தது போன்று அரைகுறையாக எடிட் செய்யப்பட்ட படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தவறாக இதைப் பகிர்வதால் இது பற்றிய ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தேஜஸ்வி யாதவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சால்வை அணிவித்தது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "Google லில் தேடினாலும் கிடைக்காத படம்.

லல்லு மவன் தேஜஸ்வி யாதவ் உடன் நம்ம லெக் தாத்தா.." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட பதிவை Bharatwaj Nambi Nambi என்பவர் 2020 நவம்பர் 10ம் தேதி பகிர்ந்துள்ளார். ஏராளமானோர் இதே படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தைப் பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் இதை ஏராளமானவர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

பொதுவாக குறிப்பிட்ட தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மம்தா பானர்ஜி, வைகோவின் ராசியை வைத்து விமர்சன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பதிலுக்கு மோடியின் அதிர்ஷ்டம் பற்றி டிரம்ப் தோல்வி வரை வைத்துக் கிண்டல் செய்வதும் நடக்கிறது. யார் அதிர்ஷ்டசாலி, அதிர்ஷ்டமில்லாதவர் என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

இந்த புகைப்படத்தின் அசலைத் தேடினோம். கூகுளில் கிடைக்காத படம் என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மு.க.ஸ்டாலினுக்கு வைகோ சால்வை அணிவிக்கும் புகைப்படம் 2017ம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: economictimes I Archive 1 I patrikai.com I Archive 2

தொடர்ந்து தேடியபோது இது 2017ம் ஆண்டு நடந்த முரசொலி பவள விழாவின் போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. மு.க.ஸ்டாலினுக்கு வைகோ சால்வை அணிவிக்கும் காட்சிகள் அந்த விழாவின் வீடியோ பதிவில் நமக்குக் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: YouTube Link

இந்த படத்தை எடுத்து எடிட் செய்து விஷமத்தனமான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இது எடிட் செய்யப்பட்ட படம் என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சால்வை அணிவித்ததாக பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வைரலாகப் பரவும் வைகோ மற்றும் தேஜஸ்வி யாதவின் எடிட் செய்த புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian

Result: Altered