மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா?

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றனர்,’’ என்று கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி விமர்சித்ததாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

நவம்பர் 3, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றது பற்றி விமர்சிப்பதைப் போன்ற கருத்து இடம்பெற்றுள்ளது.

இதனை உண்மையா எனக் கேட்டு, நமது வாசகர்கள் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் உண்மை கண்டறிய தீர்மானித்தோம்.

உண்மை அறிவோம்:
தலையை சுற்றி மூக்கை தொடுவது போல இந்த விசயம் இருப்பதால், நாம் நேரடியாக நியூஸ்7 தமிழ் ஊடகம் தரப்பை தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்க முயன்றோம். இதன்படி, அவர்களது ஆசிரியர்கள் குழு தரப்பில் கேட்டபோது, ‘’இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. இந்த நியூஸ் கார்டில் உள்ள தேதியை பாருங்கள். 2016 தேதியிட்டு, போலியாக இப்படி ஒரு செய்தியை தயாரித்துள்ளனர். 2016ம் ஆண்டில் வருண் சக்கரவர்த்தியே ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. இது வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட போலிச் செய்தி,’’ எனக் குறிப்பிட்டனர். 

இதுதவிர குறிப்பிட்ட நியூஸ் கார்டில், Laiva Memes என்றும், டிசம்பர் 23,2016 என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள எழுத்துக்களின் ஃபாண்ட் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஏகப்பட்ட வெட்டு, ஒட்டுகளுடன் இந்த போலியான நியூஸ் கார்டை தயாரித்துள்ளனர் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.

அத்துடன், இவர்கள் குறிப்பிடுவதைப் போல, மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றதா என்றால், நமக்குக் கிடைத்த விவரங்கள் சற்று குழப்பமாகவே இருந்தன. கொல்கத்தா அணிதான் மும்பையிடம் 2020 ஐபிஎல் சீசனில் தோற்றதாக தகவல் கிடைத்தது. 

இது நமக்கு கூடுதல் குழப்பத்தை அளித்த நிலையில், இவர்கள் மீம்ஸ் பகிர்ந்த 3, நவம்பர் 2020 அன்று ஏதேனும் ஐபிஎல் போட்டி நடைபெற்றதா என விவரம் தேடினோம். அப்போது, சன் ரைசர்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தோற்றதாக, விவரம் கிடைத்தது. எனவே, இந்த செய்தியையும் தவறாகக் குறிப்பிட்டு, வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply