FACT CHECK: புதிய பொலிவுடன் அயோத்தி ரயில் நிலையம் என்று பரவும் குஜராத் காந்திநகர் வீடியோ!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

அயோத்தியில் புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் நிலையம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தி நகரத்தில் புத்தம் புதிய பொலிவுடன் இரயில் நிலைய” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு இந்துவின் குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இதை 2021 ஜூலை 10ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்துக்களின் மிகவும் புனிதமான இடங்களுள் அயோத்தியும் ஒன்று. அங்கு தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையம் அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்த சூழலில் அயோத்தி ரயில் நிலையம் என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவில் ரயில் நிலைய சுற்றில் கோவில் படங்கள் உள்ளன. அது மட்டுமின்றி குஜராத் சுற்றுலாத் துறையின் விளம்பரங்களையும் காண முடிந்தது. ஒவ்வொரு மாநில சுற்றுலா துறையும் பல்வேறு மாநிலங்களில் விளம்பரம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான். இருப்பினும் இது குஜராத் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையமா அல்லது உண்மையில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ரயில் நிலையம்தானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோவை பார்த்தபோது ரயில் நிலைய நுழைவாயிலில் பிரமீட் போன்ற ஒரு கட்டிடம் இருப்பதைக் காண முடிந்தது. எனவே, அயோத்தி ரயில் நிலையத்தின் காட்சிகளுடன் இந்த வீடியோ காட்சி ஒத்துப் போகிறதா என்று முதலில் ஆய்வு செய்தோம். கூகுள் மேப்-ல் அயோத்தி ரயில் நிலையம் புகைப்படங்களை பார்த்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ரயில் நிலையம் முழுக்க ஒரே கூரையின் கீழ் இருப்பது போன்று காட்சி இருந்தது. ஆனால் அயோத்தியில் அப்படியான அமைப்பு இல்லை. கூகுள் மேப்-ல் உள்ள படங்கள் எதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போகவில்லை. மேலும் ரயில் நிலையத்தின் இரு பகுதிகளிலும் பிரமீட் போன்ற எந்த ஒரு அமைப்பையும் காண முடியவில்லை. எனவே, இது அயோத்தி ரயில் நிலையம் இல்லை என்று தெளிவாகிறது.

அப்படி என்றால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை அறிய ஆய்வை தொடர்ந்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். குறிப்பாக பிரமீட் வடிவமைப்பு மற்றும் வெளிப்புறத்தில் கம்பி கம்பியாக நீட்டிக்கொண்டிருக்கும் படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். ஆனால் இது எந்த ரயில் நிலையம் என்று ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, கூகுளில் நவீன ரயில் நிலையங்கள் என்று டைப் செய்து தேடினோம். அப்போது குஜராத் மாநிலம் காந்திநகர் ரயில் நிலையத்தின் முன்பு பிரமீட் போன்று காட்சி அளிக்கும் கோபுரம் இருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் காந்திநகர் ரயில் நிலையம் படத்தை கூகுள் மேப்-ல் தேடினோம்.

அசல் பதிவைக் காண: financialexpress.com I Archive

அப்போது காட்சிகள் அனைத்தும் காந்தி நகர் ரயில் நிலையத்துடன் ஒத்துப்போவதை காண முடிந்தது. கூகுள் மேப்-ல் இடம் பெற்ற வீடியோக்களை பார்த்தோம் அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. மிகத் தெளிவாக அந்த வீடியோ இருந்தது. ஆனால் அதில் ரயில் நிலையத்துக்கு வெளியே காட்டப்பட்ட காட்சிகள் இல்லை. 

எனவே, யூடியூப், ஃபேஸ்புக்கில் காந்திநகர் ரயில் நிலையம் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, காந்தி நகர் ரயில் நிலையம் என்று குறிப்பிட்டு பலரும் பகிர்ந்திருந்த நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் தெளிவான உண்மையான வீடியோ நமக்குக் கிடைத்தது. இந்த வீடியோவை Ahmedabad – Himatnagar – Udaipur Broad Gauge Conversion என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜூலை 4ம் தேதி வெளியிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதன் மூலம் குஜராத் மாநிலம் காந்திநகர் ரயில் நிலைய வீடியோவை எடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது.

முடிவு:

அயோத்தி ரயில் நிலையம் என்று பகிரப்படும் வீடியோ குஜராத் மாநிலம் காந்தி நகரில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புதிய பொலிவுடன் அயோத்தி ரயில் நிலையம் என்று பரவும் குஜராத் காந்திநகர் வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False