திராவிட கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பற்றி ராமதாஸ் பேசியது என்ன?
‘’திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் படுப்பதற்குச் சமம்,’’ என்று ராமதாஸ் சொன்னதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
பக்கோடா பாய்ஸ் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த ஜூலை 11 அன்று வெளியிட்டுள்ளது. இதில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது சொந்த அம்மாவுடன் படுப்பதற்குச் சமம், என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ராமதாஸ் சொன்னதாகவும், அதுபற்றி அன்புமணி பாராட்டு தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பேசுவது போலவும் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். பலரும் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம் என்று ராமதாஸ் சொன்னதாகக்கூறி பல ஆண்டுகளாகவே செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஃபேஸ்புக் பதிவிலும் இதே தகவல்தான் பகிர்ந்துள்ளனர். இதன்படி, ராமதாஸ் இப்படி உண்மையில் ஏதேனும் பேசியுள்ளாரா என தகவல் தேடினோம்.
நீண்ட நேரம் தேடியும், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இதை வைத்துப் பார்த்தால் ராமதாஸ் அப்படி பேசவில்லை என்றே தெரிகிறது. என்றாலும், திரும்பவும், தகவல் தேடினோம். இதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு பெயரில் கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிளாக் செய்திக் கட்டுரை ஒன்று கிடைத்தது. ஆனால், அதில், ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் படுப்பதற்குச் சமம் என்று, ராமதாஸ் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை ராமதாஸ் விமர்சிக்கவில்லை. ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைப்பதை விமர்சித்ததாகக் கூறி, அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நமக்குக் கிடைத்த முதல் ஆதாரத்திலேயே ராமதாஸ் கூறியது பற்றி கூறப்பட்டு வரும் தகவல் முழு உண்மையல்ல என்ற விவரம் கிடைத்தது. இதன்பின், மீண்டும் நமது தேடலை தொடங்கினோம். நீண்ட நேரம் தேடியபின், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை காண நேரிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அந்த நபரின் பதிவில் ராமதாஸ் பேசியது பற்றி வெளியான பழைய செய்திக் குறிப்பு ஒன்றை பகிர்ந்து, ராமதாஸ் மீது வதந்தி பரப்புவோரை எச்சரிப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்த பதிவில், ராமதாஸ் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றை பற்றிய செய்தி பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’ஜெயலலிதாவிடம் காசு வாங்கிக் கொண்டு கூட்டணி வைக்கப் போவதாக என் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். அப்படி நான் யாருக்கும் தெரியாமல் செய்வேனா, அப்படிச் செய்வது பெற்ற தாயுடன், மகளுடன் உறவு வைப்பதற்குச் சமம்,’’ என்று ராமதாஸ் பேசியதாக உள்ளது.
இதன்படி, ரகசியமாக பணம் வாங்கிக் கொண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதாக, தன் மீது வன்னியர் சங்கத்தினர் தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துப் பேசியபோது, அப்படி ரகசியமாகச் செய்ய மாட்டேன், அது தாய் மற்றும் மகளுடன் உறவு வைப்பதற்குச் சமம், என்று ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
இதை வைத்துப் பார்த்தால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாய், மகளுடன் உறவு வைப்பதற்குச் சமம், என்று ராமதாஸ் பேசவில்லை என தெளிவாகிறது. அதாவது, ரகசியமாகப் பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி வைக்கப் போவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும்போதுதான் ராமதாஸ் அவ்வாறு உதாரணம் கூறியிருக்கிறார். எந்த இடத்திலும் திராவிட கட்சிகளுடனான தேர்தல் கூட்டணி பற்றி அவர் இப்படி விமர்சித்துப் பேசவில்லை என தெரிகிறது.
ஆனால், அடிக்கடி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என, ராமதாஸ் பேசுவது வழக்கம். இதுபற்றிய வீடியோ செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறித்தான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அஇஅதிமுக.,வுடன் அவர் கூட்டணி வைத்தார். அது ராமதாஸின் அரசியல் வாழ்வில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியதாக மாறியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதுபற்றி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்ய வேண்டும்.
இதுதவிர, சந்தேகத்தின் பேரில், பெற்ற தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம் எனப் பலரும் ராமதாஸ் பற்றி கூறுவது தொடர்பாக விளக்கம் பெற, பாமக., தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால், இதுபற்றி சரியான விளக்கம் தர அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவை உண்மை என்றோ அல்லது தவறு என்றோ நிரூபிக்க போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை. எனவே, இதில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:திராவிட கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைப்பது பற்றி ராமதாஸ் பேசியது என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Mixture