1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

SHASHI 2.png
Facebook LinkArchived Link

காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூட்டம் சேர்ப்பு, மிகைப்படுத்தப்பட்ட ஊடக பிரசாரம் எதுவும் இல்லாமல் கூடிய கூட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்ற போது… இது தானா சேர்ந்த கூட்டம். காசு வச்சி விளம்பரம் பண்ணி பொறுக்கி தின்னும் கூட்டம் அல்ல…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Venkat Ramanujam என்பவர் 2019 செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சசிதரூர் வெளியிட்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட் என்பதால் இது உண்மையாக இருக்கும் என்றே பலரும் பகிர்ந்துள்ளனர். இந்திரா காந்தி என்பதற்கு பதில் இந்தியா காந்தி என்று உள்ளது. எனவே, உண்மையில் இந்த பதிவை சசிதரூர்தான் வெளியிட்டுள்ளாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தேடியபோது 2019 செப்டம்பர் 23ம் தேதி சசிதரூர் இந்த பதிவை வெளியிட்டது உண்மைதான் என்று தெரிந்தது.

Archived Link

ஆனால், இந்த பதிவுக்கு பதில் பதிவு வெளியிட்ட பலரும் இந்த புகைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை, 1955ம் ஆண்டு நேரு ரஷ்யா சென்றபோது எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கான ஆதாரத்தையும் வௌியிட்டிருந்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் உண்மையை மட்டும்தான் பேசுகிறார்களா என்று ஆய்வு செய்வது நம்முடைய நோக்கம் இல்லை. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், சசிதரூர் வெளியிட்ட பதிவிலேயே தவறு என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Archived Link

தொடர்ந்து தேடியபோது, தன்னுடைய தவற்றை உணர்ந்து சசிதரூர் மற்றொரு பதிவு வெளியிட்டது தெரிந்தது. அதில், “எனக்கு ஃபார்வர்டு செய்யப்பட்ட இந்த புகைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை யுஎஸ்எஸ்ஆர்-ல் எடுக்கப்பட்டது. அப்படி இருந்தாலும் நான் தகவலில் திருத்தம் மேற்கொள்ளவில்லை. உண்மை என்ன என்றால், முன்னாள் பிரதமர் கூட வெளிநாட்டில் புகழ்மழையில் நனைந்துள்ளார். மரியாதை நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்திய பிரதமருக்கு மரியாதை அளிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் மரியாதை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை செப்டம்பர் 24ம் தேதி அவர் வெளியிட்டுள்ளார்.

Archived Link

சசிதரூர் தன்னுடைய தவற்றை மறைக்காமல் பழைய பதிவுடன் சேர்த்து புதிதாக ஒரு ட்வீட் வெளியிட்டுவிட்டார். ஆனால், அவருடைய பழைய, பிழையுடன் கூடிய ட்விட்டடர் பதிவு ஸ்கிரீன்ஷாட் மட்டும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து உலாவி வருகிறது.

நம்முடைய ஆய்வில்,

அமெரிக்காவில் பிரதமர் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு என்று சசிதரூர் வெளியிட்ட பதிவு உண்மையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலரும் ஆதாரத்துடன் அது ரஷ்யா என்று பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மை தெரிந்தபிறகு, தன்னுடைய தவற்றை ஒப்புக்கொண்டு சசிதரூர் மற்றொரு ட்வீட் வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 1954ம் ஆண்டு அமெரிக்கா சென்ற அப்போதைய பிரதமர் நேருவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்று பகிரப்பட்ட படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False