சாலையில் டீ விற்கும் நபரிடம் டீ வாங்கிவிட்டு அதைக் குடிக்காமல் கீழே கொட்டிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் காபி, டீ விற்கும் நபரிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டீ/காபி வாங்கி குடித்த வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 5ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஒரு டீ வாங்கி ட்ராமா பண்ணிட்டு கடைசி வரைக்கும் அந்த டீல ஒரு மடக்கு கூட குடிக்காம உணவையும்.உழைப்பையும். ஒருசேர.குப்பையில் போட்ட.கோமான். அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் சாலையோர இருசக்கர வாகனத்தில் டீ விற்கும் நபரிடம் டீ/காபி வாங்கி குடித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்த நிலையில், டீ வாங்கிய அண்ணாமலை அதை குடிக்காமல் அப்படியே குப்பையில் கொட்டினார் என்று மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்த வீடியோ முழுமையானதாக இல்லை. எடிட் செய்யப்பட்டது போல் உள்ளது. எனவே, டீ வாங்கி குப்பையில் போட்டதாக பரவும் வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மாநாட்டுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடந்தது போல அண்ணாமலையின் உரையாடல் இருந்தது. டீ விற்பவரிடம் காபி உள்ளதா என்று அண்ணாமலை கேட்கிறார். "காபி எல்லாம் முடிஞ்சிடுச்சு... கொஞ்சோண்டு இருக்கிறது" என்று அவர் பதில் கூறுகிறார். நான் குடிக்கும் அளவுக்கு கொஞ்சமாக கொடுங்கள் என்று அண்ணாமலை கேட்கிறார். இருக்கிறது தருகிறேன் என்று கடைக்காரர் கூறுகிறார்.

மோடி மாநாடு சமீபத்தில் நடந்தது என்பதால் யூடியூபில், "அண்ணாமலை, டீ" என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது தினமலர் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவை பார்க்கும்போது, அண்ணாமலை காபி கேட்டு வாங்கி குடிக்கிறார். காபி குடித்தபடியே அந்த வியாபாரியிடம் பேசுகிறார். அருகிலிருந்த நபரிடம் போன் வாங்குகிறார். தேநீர் விற்பனை செய்யும் நபரிடம் பிறந்த ஆண்டை கேட்கிறார். 1978 என்று அவர் கூறியதும் அதையே டைப் செய்கிறார். பின்னர் அருகில் இருக்கும் நபர் பின் நம்பர் டைப் செய்கிறார். பணம் செலுத்திவிட்டுப் பேசியபடியே மீண்டும் காபி குடிக்கிறார்.

தினமலர் வெளியிட்டிருந்த வீடியோவில் கூட “பின் நம்பர்” டைப் செய்வது எல்லாம் அகற்றப்பட்டிருந்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் தாமரை தேசம் என்ற யூடியூப் பக்கத்தில் முழு வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் அண்ணாமலை சிறிது காபி குடிப்பது போல காட்சிகள் உள்ளன. காபி குடித்து முடித்த பிறகு அந்த பேப்பர் கப்பை பின்னால் இருந்தவர்களிடம் கொடுக்கப் பார்க்கிறார். பிறகு இந்த கப்பை எப்படி வாங்கிட்டு போவீங்க என்று கடைக்காரரிடமே கேட்கிறார். அவர் குப்பை கப் போடும் பையை காட்ட அதில் அண்ணாமலை போடுகிறார்.

இதன் மூலம் அண்ணாமலை சாலையோர வியாபாரியிடம் டீ வாங்கிவிட்டு, குடிக்காமல் கீழே போட்டு நாடகமாடினார் என்று பரவும் வீடியோ முழுமையானது இல்லை, எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்த பதிவு தவறானது எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தெருவில் டீ விற்பவரிடம் டீ வாங்கி குடிப்பது ஒரு வாய் கூட அருந்தாமல் கீழே கொட்டிய அண்ணாமலை என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதையும் அவர் காபி அருந்தும் காட்சி தெளிவாக தெரிவதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘டீ குடிப்பது போன்று டிராமா செய்த அண்ணாமலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered