பாகிஸ்தான் பிரதமருடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள்? – விஷம ஃபேஸ்புக் பதிவு

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் படம் பகிரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Barkha Dutt 2.png
Facebook LinkArchived Link

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இந்திய பத்திரிகையாளர்கள் பர்க்கா தத் மற்றும் சுஹாசினி ஹைதர் ஆகியோர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மற்றொரு புகைப்படத்தில் டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவிகளுடன் பர்க்கா தத் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இரண்டிலும் பர்க்கா தத் மட்டும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளார்.

நிலைத் தகவலில், “பாகிஸ்தான் பிரதமருடன், இஸ்லாமிய கலவரகாரர்கள். திட்டமிட்டு நடத்தப்படுவது தான் இந்த வடமாநில கலவரம். விழிப்புடன் இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. ஜெய் ஹிந்து” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, chanakya Channel | சாணக்யா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Raja Tamilan என்பவர் 2019 டிசம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டிசம்பர் 14, 15ம் தேதிகளில் டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 15ம் தேதி மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியபோது, ஒரு மாணவனை சில மாணவிகள் இணைந்து காப்பாற்றினர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அந்த மாணவிகளை பத்திரிகையாளர் பர்க்கா தத் சந்தித்து பேட்டி எடுத்திருந்தார்கள். அவர்கள் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Archived Link

அந்த பதிவிலிருந்து புகைப்படத்தை எடுத்து, போராடிய மாணவிகள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் இஸ்லாமிய கலவரக்காரர்கள் என்று விஷமத்தனமான முறையில் பதிவிட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் பர்க்கா தத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சமீபத்தில் சந்தித்தாரா, இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இந்த படத்தை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு பர்க்கா தத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரிந்தது.

Archived Link

அதில், “சக பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதருடன் இணைந்து இம்ரான் கானை பேட்டி எடுத்த போது” என்று மலரும் நினைவு என்ற வகையில் பதிவிட்டிருந்தார். சுஹாசினி ஹைதர் பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் மகள் ஆவார். தற்போது அவர் தி இந்து ஆங்கில பத்திரிகையில் பணியாற்றி வருகிறார்.

பர்க்கா தத் இந்த படத்தை 2018 ஆகஸ்ட் 12ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தார். இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 18, 2019 அன்றுதான் பதவி ஏற்றார். இதன் மூலம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் சந்திப்பதற்கு முன்பு பத்திரிகையாளர் என்ற வகையில் இம்ரான்கானை சந்தித்து பேட்டி எடுத்த படத்தை விஷமத்தனமாக வெளியிட்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. 

Barkha Dutt 3.png
economictimes.indiatimes.comArchived Link

பர்க்கா தத் பற்றித் தேடியபோது, 1996ம் ஆண்டிலேயே நரேந்திர மோடியை அவர் பேட்டி எடுத்தது தெரிந்தது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் கிடைத்தன. அப்படி என்றால் அவர்கள் அனைவரையும் கலவரக்காரர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்களா என்ற கேள்வி எழுந்தது. 

Barkha Dutt 4.png
beingindian.comArchived Link 1
satyavijayi.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்

படத்தில் இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள் பர்க்கா தத் மற்றும் சுஹாசினி ஹைதர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பிரதமர் ஆவதற்கு முன்பு எப்போதே எடுத்த படத்தை பர்க்கா தத் பதிவிட்டிருந்தது அவருடைய ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் என்ற முறையில் பாரதிய ஜனதா கட்சியின் மோடி, ஸ்மிருதி இரானி உள்பட பலருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர் பர்க்கா தத் படத்தை வெளியிட்டு பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டிருப்பது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாகிஸ்தான் பிரதமருடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள்? – விஷம ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False