
உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலம் பேசத் திணறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பு ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உதயநிதி ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ஸ்டாலின் இரத்தம் இங்கிலீஸ் தெரியாது 🤡😹 இந்த லட்சணத்துல தான் இருமொழி கொள்கை இருக்குது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் பாஜக ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆங்கிலமே பேசத் தெரியவில்லை, இந்த நிலையில் இரண்டு மொழி கொள்கை தேவையா என்று பாஜக-வினர் சமூக ஊடகங்களில் வீடியோவை பரப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ முழுமையான வீடியோவாக இல்லை. முழு வீடியோவை வெளியிட்டிருந்தால் அவர் திணறினாரா, பேசினாரா என்பது தெரிந்திருக்கும். உதயநிதி ஸ்டாலின் சரளமாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்தான். எனவே, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக பாலிமர் டிவி வெளியிட்டிருந்த வீடியோ கிடைத்தது. அதில் எந்த தடுமாற்றமும் இன்றி உதயநிதி ஸ்டாலின் பேசுவதைக் காண முடிந்தது. ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க ஆரம்பிக்கிறார், அதற்குள் தமிழ் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் தமிழில் கேள்வி கேட்கின்றனர். அவர் அவர்களுக்கு தமிழில் பதில் அளிக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேசிய பழைய நிகழ்ச்சி காணொளிகளைத் தேடி எடுத்தோம். ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த ஆங்கில பேட்டி, நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசியது என்று பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. எனவே, உதயநிதி ஸ்டாலினுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற கருத்து தவறானது என்பது தெளிவாகிறது. வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியின் ஒரு சில விநாடிகள் மட்டும் வெட்டி எடுத்து, ஆங்கிலத்தில் பேச தடுமாறினார் என்று தவறாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஆங்கிலம் பேசத் தடுமாறும் உதயநிதி என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered
