
தமிழகத்தில் வட இந்தியர் நல வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா படங்களுடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் வட இந்தியர் நலவாரியம் அமைக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Easty Stephen என்பவர் 2021 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தல் நேரத்தில் பல போலியான நியூஸ் கார்டுகள் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. தேர்தல் முடிந்த நிலையிலும் அவை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. எனவே, அவற்றை அடையாளம் காணும் வகையில் உண்மை கண்டறியும் ஆய்வுகளைத் தொடர்ந்தோம்.

தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா என்று ஆய்வு செய்வதற்கு முன்பு இந்த நியூஸ் கார்டு உண்மையானதா என்று பார்த்தோம். இது வழக்கமாக புதிய தலைமுறை பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை. பின்னணி டிசைன் இல்லை. எனவே, எடிட் செய்யப்பட்டது என்பது தெரிந்தது.
இதை உறுதி செய்துகொள்ள ஏப்ரல் 1ம் தேதி புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்ற அமித்ஷா படத்துடன் நியூஸ் கார்டு இல்லை. ஆனால், “தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா, உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஊழல் செய்த காங்கிரஸ் – திமுக வேண்டுமா, ஊழல் செய்யாத பாஜக கூட்டணி வேண்டுமா? என அமித்ஷா பிரசாரம் செய்ததாக ஒரு நியூஸ் கார்டு மட்டும் இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
வட இந்தியர் நல வாரியம் தொடர்பான நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனுக்கு அனுப்பி விசாரித்தோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
அடுத்ததாக ஏப்ரல் 1ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் பேசியது தொடர்பாக ஆய்வு செய்தோம். அரவக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் அவர் ஏப்ரல் 1ம் தேதி பேசியது தெரிந்தது. அவற்றைப் பார்த்தோம். எதிலும் அவர் வட இந்தியர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று கூறியதாக குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: dinamani.com I Archive 1 I oneindia.com I Archive 2
பா.ஜ.க யூடியூப் பக்கத்தில் அமித்ஷா பங்கேற்ற திருக்கோவிலூர் கூட்டத்தின் முழு வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில், அமித்ஷா இந்தியில் பேச அதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதைப் பார்த்தோம். அதிலும் வட இந்தியர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று அமித் ஷா கூறியதாக இல்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டும் தகவலும் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழகத்தில் வட இந்தியர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழகத்தில் வட இந்தியர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
